தமிழ்நாடு பதிவெண் இல்லாத ஆம்னி பஸ்கள் 14ம் தேதி முதல் தடை: போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை:தமிழ்நாட்டில் ஓடும் கணிசமான ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவெண்ணுடன் இருப்பதில்லை. கர்நாடகா, புதுச்சேரி, அஸ்ஸாம் உள்பட வேறு மாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் ஓடுகிறது. இப்படி வெளிமாநில பதிவெண் கொண்ட 652 ஆம்னி பேருந்துகளால் ஆண்டொன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்படுகிறது. வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழகப் பதிவு எண்ணாக மாற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே ஆம்னி பேருந்துகள் சங்கத்தினர் கோரியதை அடுத்து பதிவெண் மாற்றுவதற்கான அவகாசத்தை அரசு நீட்டித்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு பதிவெண் இல்லாத ஆம்னி பேருந்துகளுக்கு இனி அனுமதி இல்லை என அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இனி உரிய தமிழக பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வரும் ஜூன் 14ம் தேதி முதல் மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை.

எனவே முறையற்ற வகையில் வெளி மாநிலங்களில் பதிவு செய்து இயங்கும் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் இனி பயணிகள் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மீறி பயணம் செய்தால் அரசு அதற்கு பொறுப்பேற்காது. மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜமைக்கா நாட்டை துவம்சம் செய்த ‘பெரில்’ புயல் : மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த காற்று; தொடர் கனமழை!!

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு