கர்நாடக திறந்துவிட்ட உபரி நீரை கணக்கில் சேர்க்க கூடாது: டெல்லியில் நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் வாதம்

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 34வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டின் தரப்பில் இருந்து நீர் வளத்துறை செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று பல்வேறு முக்கிய கோரிக்கைகளை ஆணையத்தின் முன்னிலையில் வைத்தனர். கூட்டத்துக்கு பிறகு நீர் வளத்துறை செயலாளர் மணிவாசன் அளித்த பேட்டியில், “ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இந்த ஆண்டில் 119.46 டிஎம்சி நீர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும். ஆனால் தற்போது வரை 200க்கும் மேலான டி.எம்.சி நீர் வந்துள்ளது.

ஆனால் இதில் உபரி நீர் அதிகமாக வந்துள்ளது. இதனை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டிய மாதாந்திர நீருடன் சேர்க்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் நீரே சாகுபடிக்கும், குடிநீருக்கும் பயன்படும். ஆனால், அதிக மழை காரணமாக வரும் உபரி நீரை ஓரிரு வாரத்தில் திறந்து விட்டு அதனை தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நீர் கணக்கில் வைக்க முடியாது என்பதே எங்களது தரப்பின் முக்கிய வாதங்களாக இருந்தது. அதனையே கூட்டத்திலும் வலியுறுத்தினோம். அதேபபோன்று மேகதாது அணை விவகாரம் என்பது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்ட நிகழ்ச்சி நிரலில் வராது என்பதால், அதுதொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது