சென்னை விமானநிலைய டோல்கேட்டில் தமிழக காங்கிரஸ் பெண் எம்பிக்கு அவமரியாதை: மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்

மீனம்பாக்கம்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி பெண் எம்பியாக இருப்பவர் ஆர்.சுதா. இவர், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராகவும் வழக்கறிஞராகவும் இருக்கிறார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் புதுடெல்லியில் இருந்து காங்கிரஸ் பெண் எம்பி சுதா விமானம் மூலமாக சென்னை வந்துள்ளார். அங்கிருந்து காரில் புறப்பட்டபோது டோல்கேட் ஊழியர்கள், சுதா எம்பியின் காருக்கு பார்க்கிங் கட்டணம் கேட்டு வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு, தான் ஒரு எம்பி என்பதால், தனக்கு பார்க்கிங் கட்டணம் கிடையாது என்று பெண் எம்பி கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ளாத டோல்கேட் ஊழியர்கள், பெண் எம்பி சுதாவை அவதூறாகவும், கண்ணியக் குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. சென்னை விமானநிலைய சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில், ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் இந்திய விமானநிலைய ஆணையத்தின் சென்னை அலுவலகத்துக்கு பெண் எம்பி சுதா புகார் அளித்துள்ளார்.

பெண் எம்பி சுதாவின் குற்றச்சாட்டுக்கு, அதே எக்ஸ் வலைதளப் பக்கத்தில் சென்னை விமானநிலைய அதிகாரிகளும் பதிலளித்துள்ளனர். அதில், ‘உங்களுக்கு நிகழ்ந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. டோல்கேட் கட்டணம் வசூலிப்பது தனியார் ஏஜென்சி நிறுவனம். உங்களுக்கு நடந்துள்ள சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட டோல்கேட் ஊழியர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம். நடந்த சம்பவத்துக்கு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ என்று விமானநிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலே எழவில்லை: திருமாவளவன் பேட்டி

கடன் தொல்லையால் சோகம் 3 குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி: 4 வயது சிறுவன் பரிதாப பலி

ஆட்சியை காப்பாற்றவே பாஜவுடன் இபிஎஸ் கூட்டணி: அதிமுக அவைத்தலைவர் பேச்சு