தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் மரணம்: சொந்த கிராமத்தில் நாளை உடல் அடக்கம்

பெரம்பூர்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (76). வயது முதிர்வு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 3ம் தேதி அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெள்ளையன் நேற்று மதியம் 2.30 மணி அளவில் உயிரிழந்தார்.

அவரது உடல் பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள வணிகர் சங்க அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று மாலை 4 மணி அளவில் பெரம்பூரில் இருந்து திருச்செந்தூரில் உள்ள பிச்சிவிளை கிராமத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணி அளவில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்: வெள்ளையன் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மன வருத்தமளிக்கிறது.

இந்த சமயத்தில், அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் தங்கம் தென்னரசு: வெள்ளையன் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், வணிகப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிச்சாமி (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), துரை வைகோ (மதிமுக) ஓபிஎஸ் (முன்னாள் முதல்வர்), முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ராமதாஸ் (பாமக),பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக), ஜி.கே.வாசன் (தமாகா), டிடிவி.தினகரன் (அமமுக), சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையை சேர்ந்த அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

தமிழாசிரியர் பணிக்கான அறிவிக்கையிலிருந்து இந்தி/ சமஸ்கிருதம் தொடர்பான அம்சத்தை நீக்குமாறு வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் இருந்து பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது..!!

சிவகங்கையில் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய லஞ்சம்: ஊழியர் கைது