தமிழ்நாடு புறக்கணிப்பு

எப்போதும் போல இப்போதும் பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். வழக்கமாக தமிழ்நாட்டிற்கு எதுவும் கிடைக்காது. அதுதெரிந்ததுதான். இந்த முறை தமிழ் கூட பட்ெஜட்டில் இடம்பெறவில்லை. பட்ஜெட் உரையில், வழக்கமாக தமிழ், திருக்குறள் கூட இடம்பெறவில்லை. இந்த முறை தமிழ்நாடும், புதுவையும் 40க்கு 40 திமுக கூட்டணிக்கு கொடுத்து விட்டதால் தமிழ் கூட பட்ஜெட்டில் இருந்து புறக்கணிக்கப்பட்டு விட்டது. ஆனால் மோடி ஆட்சியை காப்பாற்றும் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய பாலங்கள், விமானநிலையம், மருத்துவக்கல்லூரி, தேசிய நெடுஞ்சாலைகள் இன்னும் ஏராளமான திட்டங்கள் பீகார் மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன. சுமார் ரூ.60 ஆயிரம் கோடிக்கு பீகார் மாநிலத்திற்கு பட்ஜெட்டில் ஜாக்பாட் வழங்கப்பட்டுள்ளது. அதே கதைதான் ஆந்திராவுக்கும். தலைநகர் அமராவதியை மேம்படுத்த மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி இந்த நிதியாண்டு கணக்கில் வரவு வைக்கப்படுவதாக கூறி சந்திரபாபுநாயுடுவுக்கு ஐஸ் வைத்து இருக்கிறார் நிர்மலா.

ஆந்திராவில் உள்ள 2 தொழில் மண்டலங்களுக்கும் உள்கட்டமைப்பு நிதி, ராயலசீமா, பிரகாசம் மாவட்டங்களுக்கு நிதி அறிவித்து அசத்தி இருக்கிறார். ஆனால் அண்டை மாநிலங்களான தெலங்கானா, தமிழ்நாடு, ஏன் முதல்முறையாக கணக்கு தொடங்கிய கேரளாவிற்கு கூட பட்ஜெட்டில் பாராமுகம் தான். அதனால் தான் இந்த பட்ஜெட் ஒன்றிய பட்ஜெட் அல்ல. பீகார், ஆந்திராவுக்கான பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. ஆந்திராவைத்தவிர, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களை மட்டும் இந்த பட்ஜெட் புறக்கணிக்கவில்லை.

தேர்தல் தோல்வி அடையவைத்த மகாராஷ்டிரா, மேற்குவங்க மாநிலங்களையும் பட்ஜெட் புறக்கணித்து உள்ளது. தமிழ்நாட்டை போல் மகாராஷ்டிரா பெயரையும் உச்சரிக்க நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை மறுத்து விட்டது. அதே போல் ராஜஸ்தானில் பா.ஜ ஆட்சி நடந்தாலும், அந்த மாநிலமும் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ் மாநில தலைவர் கோவிந்த்சிங் குற்றம் சாட்டினார். ராஜஸ்தானில் 2014, 2019ல் பா.ஜ 25 இடங்களை மொத்தமாக வாரிச்சுருட்டியது.

ஆனால் இந்த முறை 11 இடங்களை காங்கிரஸ் பிடித்து விட்டது. அந்த கோபத்தில் பட்ஜெட்டில் ராஜஸ்தானை புறக்கணித்து விட்டார் நிர்மலா என்கிறார் கோவிந்த்சிங். இன்னும் பல மாநிலங்களில் புகைச்சல்கள் உள்ளன. குறிப்பாக பா.ஜ எங்கெல்லாம் தோல்வி அடைந்ததோ அந்த மாநிலங்களையும் எல்லாம் நாசூக்காக பட்ஜெட்டில் தவிர்த்து சென்று விட்டார் நிர்மலா என்ற புகாரும் எழுந்து இருக்கிறது. எல்லாவற்றையும் விட ரயில்வே துறை பற்றிய எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

சமீபகாலமாக ரயில்வேயில் பல விபத்துகள். பாதுகாப்பு உள்ளிட்ட நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை. காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லை. அதிக கட்டணம் உள்ள வந்தேபாரத் ரயில் இயக்குவதில் தான் உரிய கவனம் செலுத்தப்படுகிறது. சாமானியர்கள் செல்லும் ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை.

பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் குறைக்கப்பட்டு வருவதாக கதறல்கள் ஆங்காங்கே எழுந்தும், எதையும் கண்டுகொள்ளாமல் இந்த பட்ஜெட் அழகாக கடந்து சென்று இருக்கிறது. இன்னும் எக்கச்சக்க ஏமாற்றங்கள் இந்த பட்ஜெட்டில் இருந்தாலும் அதிக வரி கொடுக்கும் தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதே ஏமாற்றம் பல மாநிலங்களுக்கும் உள்ளன. இது மக்களுக்கான பட்ஜெட் அல்ல, பாஜவின் கூட்டணி கட்சிகளுக்கான பட்ஜெட்.

Related posts

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு