Friday, September 27, 2024
Home » 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை: தமிழ் ஆர்வலர்களின் புதையல் ‘தமிழ் மின் நூலகம்’

10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை: தமிழ் ஆர்வலர்களின் புதையல் ‘தமிழ் மின் நூலகம்’

by Neethimaan


* ‘கலைஞர் 100’ எனும் தனித்த இணைய பக்கம் உருவாக்கம்

* 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடி பக்கங்கள் பதிவேற்றம்

சென்னை: குறுகிய காலத்தில் ‘தமிழ் மின் நூலகம்’ 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ் இணைய கல்வி கழகத்தை 17.02.2001 அன்று கலைஞர் தொடங்கி வைத்தார். உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் இணையம் வழியே தமிழை கொண்டு சேர்ப்பது இந்நிறுவனத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும். தமிழ் பண்பாடு, பாரம்பரியம், மரபு, நாகரிகம், கலை, இலக்கணம், இலக்கியம் முதலியவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கணித் தமிழை வளர்த்தெடுக்கவுமான பல்வேறு அரும்பணிகளை தமிழ் இணையக் கல்விக்கழகம் ஆற்றிவருகிறது. இந்நிறுவனத்தின் ஒரு பகுதியாக, அறிவை பொதுமைசெய்யும் நோக்கத்தில் 2002ல் நூல்களை மின்னுருவாக்கும் முயற்சியில் இறங்கியது தமிழ் இணைய கல்விக்கழகம்.

முதலில் நூற்றுக்கணக்கான அரிய தமிழ் நூல்கள் தட்டச்சு வடிவிலும் பிடிஎப் வடிவிலும் பதிவேற்றப்பட்டன. பின்னர், நூல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மின்னுருவாக்க திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, கன்னிமாரா நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நுலகம், அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், உ.வே.சா. நூலகம், தமிழ்நாடு ஆவணக்காப்பகம், அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, அரசு திரைப்பட கல்லூரி, இந்திய மருத்துவ இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் உள்ள அரிய நூல்களின் லட்சக்கணக்கான பக்கங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டன. இந்த பணிகளுக்கிடையே மின் நூலக இணையதளம் (www.tamildigitallibrary.in) அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, 2017 அக்டோபர் 11 அன்று தமிழ் மின்னூலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்பட்டது.

தமிழ் மின்னூலக தளத்தில் இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் அரிய நூல்கள், பருவ இதழ்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவை பதிவேற்றப்பட்டுள்ளன. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடி பக்கங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. சீகன் பால்கு 1716ல் லத்தீன் மொழியில் அச்சிட்ட ‘Grammatica Damulica’ என்னும் தமிழ் இலக்கண நூல், தஞ்சை சரபோஜி மன்னர் தொகுப்புகள், உ.வே.சா.வின் அரிய பதிப்புகள், தென்னிந்தியாவின் முதல் செய்தித்தாளான மெட்ராஸ் கூரியர் இதழ்கள், சித்த மருத்துவச் சுவடிகள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வெளியீடுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மேலும், சங்க இலக்கியங்கள், இலக்கண நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நீதி நெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறார் இலக்கியங்கள், மருத்துவ நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், நிகண்டுகள், அகராதிகள், கலைச்சொல்லகராதிகள், ஓலைச்சுவடிகள் என மிகப் பெரும் அறிவுச் சுரங்கமாக விளங்குகிறது இந்நூலகம். ராபர்டு கால்டுவெல் எழுதிய, ‘A comparative grammar of the Dravidian or South Indian family of languages’, ‘A History of Tinnevelly’ போன்ற நூல்களுடன் பெரியாரின் ‘குடிஅரசு’, அண்ணாவின் படைப்புகள், ‘திராவிடநாடு’, ‘நம் நாடு’, ‘தென்னகம்’, ‘போர்வாள்’, ‘மன்றம்’ என்பன போன்ற திராவிட இயக்கத்தின் முன்னணி இதழ்களும் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 150ம் பிறந்தநாள் நிகழ்வை கொண்டாடும் வகையில் அவர் தொடர்பான 127 நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், ஒளிப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய www.tamildigitallibrary.in/voc என்ற வ.உ.சி. சிறப்பு இணைய பக்கம் 18.11.2022 முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. கலைஞரின் நூற்றாண்டை போற்றும் வகையில் ‘கலைஞர் 100’ என்னும் தனித்த இணைய பக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்பக்கத்தில் கலைஞர் தொடர்பான நூல்கள், இதழ்கள், உரைகள், ஒலி-ஒளிப் பொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் உரிய தேடல் வசதியுடன் வெளியிடப்பட உள்ளன.

தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள், கலைத் துறையினர், மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்குமான அரிய புதையலாகத் தமிழ் மின் நூலகம் திகழ்கிறது. இம்மின் நூலகம் 2021 மே மாதம் 1.5 கோடி பார்வையார்களை கடந்து, 2024 ஜனவரியில் 6.5 கோடி பார்வைகளை பெற்றிருந்தது. குறுகிய காலத்தில் தமிழ் மின் நூலகம் 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

four × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi