Friday, June 28, 2024
Home » புதுமைப்பெண் திட்டம் போல மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ விரைவில் துவக்கம்: மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதுமைப்பெண் திட்டம் போல மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ விரைவில் துவக்கம்: மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by Ranjith

சென்னை: ‘புதுமைப்பெண்’ திட்டம்போல, மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ விரைவில் தொடங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழகத்தின் வளர்ச்சி திட்டம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 14 மாவட்ட ஆட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நாளை கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி ஆகிய 12 மாவட்ட ஆட்சி தலைவர்களுடனும், 15ம் தேதி திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய 12 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுபோன்ற திட்டம்தான் தமிழ்நாட்டின் இளைய சக்தியின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் திட்டம். அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் மிக முக்கியமான ஆண்டுகள். புதிய உத்வேகத்துடன் மக்கள் நலப் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

ஒரு சிறந்த நல்லாட்சியை வழங்க, சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு, சிறந்த சமூகநல திட்டங்களை செயல்படுத்துதல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி எளிதாக அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய நான்கு குறிக்கோள்களில் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம். இவைதான் நல்லாட்சியின் இலக்கணங்கள். அத்தகைய நல்லாட்சியை வழங்கி வருகிறோம். ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இது நமது அரசு என்று மக்களை நினைக்க வைத்துள்ளோம். இவை அனைத்தும் தொய்வின்றி தொடர வேண்டும்.

* ‘மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தை வரும் ஜூலை திங்கள் 15ம் நாள் முதல் செப்டம்பர் திங்கள் 15ம் நாள் வரை ஊரகப் பகுதிகளில் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

* ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ மற்றும் ‘நீங்கள் நலமா?’ போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளது.

* வருவாய் துறையில், பட்டா மாறுதல், சான்றிதழ்களை பெறுவதில் பொதுமக்கள் அடையும் சிரமங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

* ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்திற்கும், இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளை புனரமைக்கும் திட்டத்திற்கும் தனிக்கவனம் செலுத்தி பணிகளை துரிதமாக முடிக்க வேண் டும்.

* அனைத்து பள்ளி குழந்தைகளும் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வகையில் ‘கல்லூரிக் கனவு’ ‘உயர்வுக்கு படி’ போன்ற திட்டங்களை ஆர்வத்துடனும், முனைப்புடனும் செயல்படுத்த வேண்டும்.

* அதேபோல், விரைவில் தொடங்கப்படவிருக்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டமும் மிகவும் முக்கியமான திட்டமாகும்.

* முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தையும் கண்காணிக்க வேண்டும்.

* 2024-25ம் ஆண்டில் தங்கள் மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை விரைவில் காலம் தாழ்த்தாமல் முடிக்க வேண்டும். ஏனென்றால் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளின் காரணமாக பணிகள் தாமதப்படக் கூடும். இதனை கருத்தில் கொண்டு கிடைத்துள்ள குறுகிய காலத்திற்குள் சரியாக திட்டமிட்டு மாவட்டங்களில் திட்டப்பணிகளை நல்ல தரத்துடன் விரைவாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். இந்த கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், முதலமைச்சரின் கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், உள்துறை செயலாளர் அமுதா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க பெரும் இயக்கம் துவங்க உள்ளோம்
இன்னொரு மிக முக்கியமான கடமையும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். ஆனால் இது போதாது. போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் – ஒழுங்கு பிரச்னை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்னை. எனவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்காக பெரும் இயக்கத்தை நாம் தொடங்க இருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள், மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் நகராட்சி துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, போதைப்பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். போதைப்பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ‘போதை பொருட்களின் நடமாட்டம் அறவே இல்லை, முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்’ என்ற நிலையை உருவாக்க பாடுபட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் அறிவுரை வழங்கினார்.

You may also like

Leave a Comment

two × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi