தமிழகத்தில் 6வது முறையாக தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு: தயிர் விலை உயர்வும் தப்பவில்லை

சென்னை: தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு லிட்டர் பால் ரூ.2, தயிர் ரூ.8 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் பால் நிறுவனங்கள் சென்னையில் உள்ள வியாபாரிகளுக்கு பால் விலையை உயர்த்துவது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பால் பதப்படுத்துவதற்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக பால் விலை உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தனியார் பால் விலை, ஒரு லிட்டருக்கு ரூ.2 உயர்ந்து இருக்கிறது. அதேபோல் ஒரு லிட்டர் தயிர் விலையும் ரூ.8 வீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த 15 மாதங்களில் இது ஆறாவது விலை உயர்வு. கடந்த 3 மாதங்களில் இது 2வது முறையாகும். இதன் காரணமாக டீ, காபி மற்றும் இதர பால் பொருட்களின் விற்பனை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த விலை உயர்வுக்கு பால் விற்பனையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பால் விற்பனையாளர்கள் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டு காலமாக பால் கொள்முதல் விலையில் பெருமளவில் மாற்றம் ஏதும் இல்லை. ஆனால், தனியார் பால் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடின்றி விலையை உயர்த்திக்கொண்டே இருக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களாக சென்னை புறநகரின் சில பகுதிகளில் ஆவின் பால் கிடைப்பதில்லை, அப்படி கிடைத்தாலும் தாமதமாக கிடைப்பதால் பால் கெட்டுபோகிறது. இதனால் தனியார் பால் வாங்க வேண்டிய நிலையே உள்ளது. சில பகுதிகளில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராட்டம் நடப்பதாலும் இந்த நிலை இருக்கிறது. இவ்வாறு கூறினர்.

தனியார் பால் விற்பனை விலைப்பட்டியல்
பழைய விலை புதிய விலை
இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 50 52
சமன்படுத்தப்பட்ட பால் 52 54
நிலைப்படுத்தப்பட்ட பால் 64 66
நிறைகொழுப்பு பால் 72 74
தயிர் 70 78

Related posts

டாக்டர்கள் மீது தாக்குதல் எதிரொலி; ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்தம்

குடும்பத்துடன் அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றபோது தெலங்கானா துணை முதல்வர் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது: மேற்கு வங்க போலீசார் அதிரடி

அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ள சிறப்பு கிராம சபைகளில் 20,000 மாணவர் பங்கேற்பு