தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபூரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யும். திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும். இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கக் கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று முதல் 21-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் என எச்சரிக்கை. வட தமிழக கடலோரம், தென் ஆந்திரா கடலோரப் பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரளா-கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து