தமிழ்நாடு முழுவதும் நூதன முறையில் வாக்குசேகரித்த வேட்பாளர்கள்: மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக காய்கறி விற்ற திமுக எம்.எல்.ஏ

திருச்சி: வாக்கு பதிவுக்கு 15 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முறைகளில் வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். மக்களை கவர காய்கறி விற்றும் இஸ்திரி போட்டும், நாற்று நட்டும் நூதன முறையில் வாக்குகளை சேகரித்தனர். திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு ஆதரவாக புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா பரமக்குடி அருகே தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். வெட்டன் விடுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அவர் காய்கறி கடையில் காய்கறிகளை விற்பனை செய்தும், ஜூஸ் கடையில் ஜூஸ் போட்டு கொடுத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேநீர் கடையில் மக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்தி தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்குகளை கேட்டார்.

திருவள்ளுர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த செந்திலுக்கு ஆதரவாக பூவிருந்தவல்லி திமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி சட்டைக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்தார். காக்களூர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்த அவர் இஸ்திரி கடையில் சட்டைக்கு இஸ்திரி போட்டு கை சின்னத்திற்கு வாக்கு கோரினார். தஞ்சை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வயலில் இரங்கி விவசாய தொழிலாளர்களுடன் இணைந்து நாற்று நட்டு வாக்கு சேகரித்தார். கோவிலூர், நடுவூர் உள்ளிட்ட கிராமங்களில் பரப்புரையில் ஈடுபட்ட அவர் தன்னுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பெண்களுடன் தலையில் பச்சை துண்டை கட்டிக்கொண்டு வயலில் இறங்கி நாட்டுப்புற பாடல்பாடிக்கொண்டே நாற்றுநட்டும் ட்ராக்டர் ஓட்டி உழவு பணி செய்தும் வாக்கு சேகரித்தார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி