தமிழகம் மாளிகை பூங்காவில் டெய்சி மலர் செடிகளில் கவாத்து பணிகள் தீவிரம்

ஊட்டி : இரண்டாம் சீசன் நெருங்கிய நிலையில், ஊட்டி தமிழகம் மாளிகை பூங்காவில் டெய்சி மலர் செடிகளில் கவாத்து செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் அனுசரிக்கப்படுகிறது. இந்த சமயங்களில் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, காட்டேரி பூங்கா, மரவியல் பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்கா ஆகியவைகள் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் மேம்படுத்தப்படும். இச்சமயங்களில் இந்த பூங்காக்களில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதில், பல வகையான பல வண்ணங்களை கொண்ட மலர்கள் பூத்துக்குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

தொடர்ந்து, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் அனுசரிக்கப்படுகிறது. இதனால், 2 மாதங்கள் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பூங்கா மேம்படுத்தப்படும். தற்போது இரண்டாம் சீசனுக்கான ஊட்டியில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து பூங்காக்களிலும் மலர் நாற்றுக்கள் உற்பத்தி மற்றும் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் மாளிகை பூங்காவிலும் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரண்டாம் சீசன் நெருங்கிய நிலையில், தற்போது பூங்காவில் டெய்சி மலர் செடிகளில் கவாத்து பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

பூங்கா சாலையோரங்களில் மற்றும் புல் மைதானங்களின் ஓரங்களிலும் வைக்கப்பட்டுள்ள இந்த டெய்சி மலர் செடிகளில் கவாத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டாம் சீசன் துவங்கும் முன்பு இந்த செடிகளில் புதிய மலர்கள் பூக்கும் என ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் மற்றும் ரோஜா செடிகள் ஆகியவைகளும் பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

தூத்துக்குடியில் மீராசா என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்

திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயில் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு

திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பலி