தமிழ்நாடு அரசுத் தொல்லியல்துறை

தமிழ்நாடு மொழி, பண்பாடு, கலை, வரலாறு அனைத்திலும் சிறப்புடைய ஒரு தொன்மையான மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தின் சிறப்புமிக்க பழமையான பண்பாட்டு வரலாற்றுக் கூறுகளை வெளிப்படுத்தவும், செம்மொழியாம் தமிழின் தொன்மையினை நிலைநிறுத்தவும், எழில்மிகு கோயில்கள், கலைநயமிக்க சிற்பங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், பண்டைய சமுதாயத்தின் பன்முனைக் கோட்பாடுகளை வெளிக்கொணரும் வகையிலும் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை 1961ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயலாற்றி வருகிறது.

தொல்லியல் துறையின் தலைமை அலுவலகம் சென்னையில் தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரியில் இயங்கிவருகிறது. இங்கு கல்வெட்டுப் பிரிவு, கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம், நூலகம், நிழற்படப் பிரிவு, அச்சுப் பிரிவு ஆகியன இயங்கிவருகின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளும்போது கிடைக்கும் தொன்மையான கலைப்பொருட்கள் அப்பகுதியிலேயே சேகரிக்கப்படும் கலைப்பொருட்களுடன் (வரலாற்றுக் காட்சியகங்கள்) அகழ் வைப்பகங்களில் காட்சிக்காக வைக்கப்படுகின்றன.

தொல்லியல் துறையின் கீழ் அரசு கீழ்த்திசை ஓலைச்சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையமும் இயங்கி வருகிறது. இது 1869ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு மையத்தில் பல அரிய ஓலைச்சுவடிகளும், புத்தகங்களும் தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, பாலி, உருது, அரபு, பாரசீகம், சிங்களம் ஆகிய மொழிகளிலும், கணிதம், வானவியல், சித்த-ஆயுர் வேத, யுனானி மருத்துவம், வேதம், ஆகமம், கட்டடக்கலை, இசை, சிற்பம், நுண்கலை, வரலாறு, இலக்கணம், இலக்கியம் போன்ற பல துறைகளிலும் உள்ளன. ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டு வரப்படுகின்றன. தொல்லியல் சார்ந்த கல்வெட்டியல், அருங்காட்சியகவியல் போன்ற இரண்டு ஆண்டு முதுநிலைப் பட்டயப்படிப்புகளையும் வழங்கிவருகிறது. மேலும் முழு விவரங்களுக்கு < https://www.tnarch.gov.in > என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.

Related posts

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு : பதில்தர ஆணை

வங்கதேச இளம்பெண் உள்பட பலரை விபசாரத்தில் தள்ளிய 3 பேர் கைது

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!