தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிதி ஒதுக்காததற்கு நாடாளுமன்றத்தில் கண்டனம்..!!

டெல்லி: தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிதி ஒதுக்காததற்கு நாடாளுமன்றத்தில் கண்டனம் எழுந்துள்ளது. 2024-25-க்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து 7-வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதி அமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டது. பீகார், உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சல் மாநிலங்களுக்கு மட்டுமே வெள்ளத் தடுப்புக்கு ரூ.11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏற்கனவே வெள்ளம் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்தும் ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் அறிவிக்காததை கண்டித்து நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர்.

பீகார், ஆந்திரா பட்ஜெட்டா? ஒன்றிய பட்ஜெட்டா?: திமுக

மோடி அரசை காப்பாற்றிக் கொள்ள பீகார், ஆந்திராவுக்கும் ஒன்றிய அரசு வாரி வழங்கியுள்ளதாக குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது பீகார் பட்ஜெட்டா, ஆந்திரா பட்ஜெட்டா என கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு ஒன்றிய பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை.

ஏழை மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை – காங்கிரஸ்

ஏழை மக்களுக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சனைக்கும் பட்ஜெட்டில் தீர்வு காணப்படவில்லை.

ஆட்சியை தக்க வைக்கவே பீகார், ஆந்திராவுக்கு நிதி – பீட்டர் அல்போன்ஸ் கண்டனம்

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற ஒன்றிய அரசு முயற்சி எடுக்கவில்லை என பீட்டர் அல்போன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் இல்லை. தமிழ்நாட்டை வயிற்றில் அடித்துவிட்டு பீகாருக்கு நிதி ஒதுக்கியுள்ளது ஒன்றிய அரசு. நிதி, திட்டங்கள் ஒதுக்குவதில் மாநிலங்கள் இடையே ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. பாரபட்சமாக நடந்து கொண்ட ஒன்றிய அரசை இதுவரை நான் பார்த்தது இல்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரை மகிழ்ச்சிபடுத்தி ஆட்சியை தொடரும் முயற்சியாக பீகார், ஆந்திராவுக்கு ஒன்றிய அரசு வாரி வழங்கியுள்ளது. சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி அடைந்தால்தான் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் இதுபோன்ற ஒன்றிய அரசை வரலாற்றில் பார்த்ததில்லை. சாமானிய மக்களுக்காக பட்ஜெட்டில் எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

Related posts

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்ததால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு!

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்: வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு

ஜம்மு காஷ்மீரில் முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் பரப்புரை நிறைவு