தமிழர் சமையலில் மரபுக் காய்கறிகள்!

நமது உணவுக் கலாச்சாரத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. சிறுதானியங்களை அதிகளவில் பயன்படுத்தி வந்த நாம் இன்று அவற்றை ஒரு வினோதப்பொருளாகப் பார்க்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். ஆனால் பல புதிய உணவுப்பொருட்களுக்கு நாம் ரசிகர்களாகி விட்டோம். காய்கறிகளில் கூட பல புதிய ரகங்கள்வந்துவிட்டன. அந்தந்தப் பகுதிகளில் விளையும் காய்கறிகள்தான், அங்கு வாழும் மக்களின் உடல் நலனுக்கு ஏற்றதாக இருக்கும் என பல உணவு நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இன்று எங்கெங்கோ விளையும் காய்கறிகள் நமது சமையல் அறையை நிறைக்கத் தொடங்கி விட்டன. இந்த நிலையில் தமிழர்களின் மரபார்ந்த காய்கறிகள் குறித்தும், அவற்றின் பயன்கள், குணங்கள் குறித்தும் இக்கட்டுரையில் காண்போம்.

கத்தரிக்காய்

கத்தரிக்காய் எந்த நாளிலும் கிடைக்கிறது. கோடைக்காலத்திலும் இதனைப் பயன்படுத்துகின்றனர். பருப்பு கலந்து சாம்பாராகவும், முழுக்கத்திரிக்காயைப் பிளந்து புளிக்குழம்பாகவும், கருவாட்டுக் குழம்புடனும் சமைக்கின்றனர். மற்றும் கூட்டு, பொரியல் ஆகியவையாகவும் செய்து உண்ணுகின்றனர். எண்ணெயில் வறுத்து எண்ணெய் கத்திரிக்காயாகவும் உண்பர். சிலருக்கு கத்திரிக்காய் உண்டால் அரிப்பை ஏற்படுத்தும்.அதனால் அவர்கள் விலக்குவதும் உண்டு.“கத்திரிக்கா முத்துனா கடத்தெருவுக்கு வந்துதான் ஆவணும்” எனப்பழமொழி உண்டு.கத்திரிக்காயில் புரதச் சத்தும் வைட்டமின் ஏ,பி,சி ஆகியனவும், சிறிதளவு கொழுப்புச்சத்தும் உள்ளன. கத்திரிப் பிஞ்சு குடலுக்கு பலம் தரும், தசைக்கும், ரத்தத்துக்கும் பலம் தரும். கபம், பித்தம், வாயு ஆகியவற்றைக் குறைக்கும்.

கோவைக்காய்

கோவைக்காய் பொருட்செலவு இல்லாமல் கிடைக்கும் காயாகும். இதனை ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மற்றும் இதன் பயனை அறிந்தவர்கள் சாம்பார், புளிக்குழம்பு, பொரியல் ஆகியவற்றைச் சமைத்து உண்ணுகின்றனர். கோவை குளிர்ச்சியுள்ளதாகும். வாயு, பித்தம், கபம் ஆகியவற்றைப் போக்கும், மேலும் வறட்சி, காய்ச்சலையும் நீக்கும் குணமுடையது. இதில் புரதம் அதிகம் உள்ளது. வாய், குடல் புண்கள் ஆறும், தோல் நோய்களை நீக்கும். உடல் வெப்பத்தைத்தணிக்கும். நாவில் சுவையறியும் உணர்வை உண்டுபண்ணும்.

சுண்டைக்காய்

சுண்டைச் செடி பெரும்பாலும் தோட்டங்களில் தானே முளைத்துவளரும். இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் என மக்கள் நம்புகின்றனர். இதனைக் கூட்டு வைத்தும், குழம்பு வைத்தும் உண்ணுகின்றனர். சுண்டைக்காயால் மார்புச் சளி, கிருமிநோய், வாதத்தினால் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும். மூலநோயையும் குணப்படுத்தும்.

பறங்கிக்காய்

இதுவும் பொருட்செலவின்றி மக்களால் வளர்க்கப்பட்டு சமைக்கப் பயன்படுத்தப்படும் காயாகும். பறங்கியை தரையோடும், வீட்டின் கூரை மீதும் படரவிட்டு வளர்ப்பர். பறங்கிக்காய் பெரும்பாலும் தைமாதத்தில் இருந்தே கிடைக்கத் தொடங்கி விடுகிறது. இது சற்று மஞ்சள் நிறமுடைய பழமாக ஆனதும் அதனை சிலநாள் வரைப் பாதுகாத்து வைத்திருந்து உண்பர். கூட்டு வைத்தும், குழம்பு வைத்தும் உண்ணப்படுகிறது. பறங்கிப் பிஞ்சை பஜ்ஜி செய்தும் உண்ணுகின்றனர். பறங்கிக்காய் சிறுநீரைக் குறைக்கும், வயிற்றைச் சுத்தம் செய்யும், கடினமானது, பசையுள்ளது, மிகுந்த சுவையும், குளிர்ச்சியும் உள்ளது. பித்தம், வாயு ஆகியவற்றை அகற்றும்.

பூசணிக்காய்

பூசணிக்காய் உணவோடு மட்டுமல்ல திருஷ்டிச் சடங்கோடும் தொடர்புடைய காயாகவும் விளங்குகிறது. எனவே தமிழ்ப் பண்பாட்டில் பூசணிக் காய்க்கென்று ஒரு சிறப்பிடம் இருக்கிறது. இக்காய் ஓராண்டு வரை கெடாமல் இருக்கும் சிறப்புடையது. பூசணிக்காயை சாம்பார், கூட்டு, புளிக்குழம்பு ஆகியவை செய்து உண்ணுகிறார்கள். பூசணிக்காய்ப் புளிக்குழம்பு சற்று வெல்லம் கலந்து வைக்கப்படுகிறது. இது புளிப்பும், இனிப்பும் கலந்த புதுச்சுவையுடன் உண்பதற்கு விருப்பத்தை ஏற்படுத்தும். பூசணிக்காயினால் அல்வா செய்வதும் உண்டு. இதனைத் திருமண விருந்தில் அண்மைக்காலமாக பரிமாறி வருகின்றனர். பூசணிக்காய் சிறுநீர் அடைப்பையும், பெருக்கத்தையும், மூச்சுத் திணறலையும், மூலத்தையும் போக்கும். இது மலத்தையும், சிறுநீரையும் வற்ற வைக்கும். தாகத்தையும் வலியையும் குறைக்கும். தளர்ந்து போன உடலுக்கு புஷ்டி வரும். காமத்தை வளர்க்கும். நாவில் உள்ள சுவையின்மையைப் போக்கும், பித்தத்தை அகற்றும். கொடியில் கிடைக்கும் காய்களில் பூசணிக்காய் சிறந்ததென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மாங்காய்

மாங்காய் சூடுமிக்கது என்று பலர் நம்புகிறார்கள். இருப்பினும் கோடைக் காலத்தில் மலிவாகவும், சொந்த மரத்திலும் கிடைப்பதனால் இக்காயைக் கோடையில் விரும்பி உண்ணுகின்றனர். முருங்கைக் காயுடன் சேர்த்துச் சமைத்து உண்ணுவர். மாங்காய், முருங்கைக்காய் குழம்பு சிறந்த பொருத்தமான கலவையாகக் கருதப்படுகிறது. மாங்காயில் புரதம், தாதுஉப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மாவுப் பொருட்கள், வைட்டமின் சி ஆகியவை உள்ளன. மாங்காயை உண்பதால் பெண்களுக்குச் சூதகக் கோளாறு ஏற்படும். ஆண்களுக்குத் தாதுவைக் குறைக்கும். சிரங்கு எளிதில் ஆறாது. தோலின் மென்மை குறையும். தொண்டைக்கட்டும் மூலநோய்க்காரர்களுக்கு இது நல்லதல்ல என மக்கள் நம்புகிறார்கள். முற்றிய மாங்காய்களை விட மாவடு உடலுக்கு ஏற்றது. மாம்பிஞ்சு குடல்புண்ணை ஆற்றும், உணவு சீரணத்தை ஒழுங்காக்கும். வாய் நாற்றம் போக்கும். மூலப்புண்ணையும் ஆற்றும் இதனால் மாம்பிஞ்சை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் இதன் புளிப்புச்சுவையை விரும்பிகுழந்தைகளும் பெண்களும் அதிகம் உண்கிறார்கள். “மாதா ஊட்டாத சோற்றை மாங்கா ஊட்டும்”என்னும் வழக்காறு மாங்காயின் பெருமையை நமக்குச் சுட்டுகிறது. பெண்கள் கருவுற்றிருக்கும்போது மாங்காயை விரும்பி உண்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முருங்கைக்காய்

எல்லா நாட்களிலும் முருங்கைக்காய் கிடைத்தாலும் கோடையில்தான் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். மாங்காயும் முருங்கைக்காயும் சேர்ந்த குழம்பு மணமுடனும், மாங்காயின் புளிப்பு முருங்கைக்காய்க்கு ஏறி மிகுந்த சுவையுடனும் அமைந்திருக்கும். முருங்கைக்காய்க் குழம்பு வைத்தும், பொரியல் வைத்தும் உண்ணப்படுகிறது. முருங்கைக்காய் குளிர்ச்சியுடையது. கண்பார்வை, தாய்ப்பால், உற்சாகம் ஆகியவற்றை வளர்க்கும். அடிவயிற்றைச் சுத்தமாக்கும். கொழுப்பு, குரல் உடைந்து போதல்,கிருமிகள், சோகை ஆகிய குறைபாடுகளை நீக்கும். முருங்கைப் பிஞ்சினால் எலும்பை உருக்குகின்ற வெப்பம், உணவில் விருப்பமின்மை ஆகியவை நீங்கும். முருங்கைக் காயினால் கபம் நீங்கும். முருங்கைக்காயில் ஏ, பி, சி ஆகிய வைட்டமின்களும், இரும்புச்சத்தும், பாஸ் பரஸ் சத்தும் மற்ற காய்களை விட அதிக அளவில் நிறைந்திருக்கிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிப்பிஞ்சைப் பச்சையாகவே உண்பது தொன்றுதொட்ட வழக்கமாக இருந்து வருகிறது. சற்று முற்றிய காயைக் கூட்டு வைத்து உண்பர். வெள்ளரிக்காயில் புரதமும், தாது உப்புக்களும், நார்ச் சத்தும் அதிக அளவில் உள்ளன. கால்சியமும், பாஸ்பரமும் கூட அதிக அளவில் உள்ளன. இரும்புச்சத்தும் நிறைந்து இருக்கிறது. தசைக்கு, இரத்தத்திற்கு வலுவூட்டக்கூடிய சத்துகளும் உள்ளன. மலச்சிக்கல், வாய்நாற்றம், தோல் வறட்சி ஆகியவற்றைப் போக்கி தோலில் மினு மினுப்பு உண்டாக்கும்.

– ரத்தின புகழேந்தி.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு