தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லை: நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

தாம்பரம்: தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. இதில், தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. இதில், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள தெருக்களில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இவ்வாறு அதிகரித்து வரும் தெரு நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரையும் திடீரென துரத்தி செல்வது, சிறுவர்களை கடிப்பது, குப்பைக் கழிவுகளை சாலையில் இழுத்து வந்து போடுவது என தினமும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி, 63வது வார்டு, கிழக்கு தாம்பரம், செந்தமிழ் சேதுப்பிள்ளை தெருவில் அப்சரா பாத்திமா என்பவர் தனது 7 வயது மகன் முகமது ஃபாரூடன் நேற்று முன்தினம் இரவு வீட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தெருநாய்கள் சிறுவனை துரத்தி சென்று கடித்ததில் சிறுவனுக்கு காலில் ரத்தம் வழிந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் உடனடியாக சிறுவனை நாய்களிடமிருந்து மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பெருகிவரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்திடும் வகையில், நாய்கள் பிடிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் அனகாபுத்தூர், பாரதிபுரம் மற்றும் குண்டுமேடு ஆகிய இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இந்திய விலங்குகள் நலவாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவர்களால் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்னர் சிகிச்சை முடிந்து 5 நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, உடல் தகுதி பெற்ற பின் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு பிறகு பிடித்த இடத்திலேயே விடப்படுகிறது. ஆனால் இவ்வாறு மீண்டும் அதே பகுதியில் தெரு நாய்களை விடுவதால் அந்த நாய்களால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு