தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி 7 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை

* தேர்தல் செலவுக்கு யாரிடம் பணம் வசூலிக்கப்பட்டது?

* விசாரணை அதிகாரிகள் சரமாரி கேள்வி

* நயினார் நாகேந்திரனுக்கு பிடி இறுகுகிறது

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக, பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தேர்தல் செலவுக்கு யாரிடம் வசூலிக்கப்பட்டது என சரமாரி கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் அளித்த பதிலை சிபிசிஐடி அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பணத்துடன் பிடிபட்ட நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள் ஆகிய 3 பேர், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்கு மூலம் அளித்தனர். அதைதொடர்ந்து, இந்த வழக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.

அதைதொடர்ந்து இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் சிசிடிவி பதிவுகள் மற்றும் பிடிபட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் பாஜக தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தனின் மகன்கள் பாலாஜி, கிஷோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். ஆனால் சிபிசிஐடி பல முறை சம்மன் அனுப்பியும் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கேசவ விநாயகம், முரளி ஆகியோர் நேரில் ஆஜராகாமல் பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தனர்.

மேலும் தங்களிடம் விசாரணை நடத்த கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கேசவ விநாயகம், பாஜக பொருளார் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் நீதிமன்றம் அவர்களிடம் விசாரணை நடத்த தடையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதைதொடர்ந்து சிபிசிஐடி மீண்டும் இவர்கள் 3 பேருக்கு சம்மன் அனுப்பினர். அப்போது தேர்தல் பிரசாரம் தொடர்பாக வாரணாசியில் இருப்பதாக வக்கீல்கள் மூலம் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

ஆனால் விசாரணை அதிகாரிகள் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வாரணாசியில் இல்லை என்றும், அவர் கோவையில் உள்ள தனது வீட்டில் இருப்பதாக தெரியவந்தது. உடனே சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் தலைமையில் கடந்த மே மாதம் அவரது வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வழக்கு தொடர்பாக பல தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரூ.4 கோடி விவகாரம் தொடர்பாக மீண்டும் பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிசிஐடி சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, எஸ்.ஆர்.சேகர் நேற்று காலை 10.30 மணிக்கு எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் தனது வழக்கறிஞர்கள் உடன் நேரில் ஆஜரானார்.

அதன் பிறகு காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணிக்கு முடிந்தது. பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் நடந்த 7 மணி நேர விசாரணையில், சிபிசிஐடி போலீசார் ரூ.4 கோடி பணம் தொடர்பாக நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தேர்தலுக்காக ரூ.4 கோடி பணம் யாரிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.

இந்த பணத்திற்கும் உங்களுக்கு என்ன தொடர்பு, பணத்துடன் பிடிபட்ட 3 பேர், உங்கள் பெயர்களை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்களே அதற்கு உங்கள் பதில் என்ன? பணத்திற்கான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா என சரமாரி கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு எஸ்.ஆர்.சேகர் அளித்த பதிலை விசாரணை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். ரூ.4 கோடி பணம் பிடிபட்ட வழக்கில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் கடைசியாக ஓரிரு நாளில் பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், UPSC சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

புதிய நாடாளுமன்றத்துக்குள் புகுந்த மழைநீரால் அதிர்ச்சி: பக்கெட் வைத்து பிடிக்கும் ஊழியர்கள்

தென்னிந்தியாவில் கொட்டிய மழை வடமேற்கு, கிழக்கில் இல்லை; 230 மாவட்டத்தில் கன மழை 232ல் சராசரிக்கும் குறைவு: இந்திய வானிலை மையம் தகவல்