தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் விற்ற கடைகளிடம் ரூ.1.17 லட்சம் அபராதம் வசூல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 280 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்களிடம் ரூ.1.17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக, உணவு பொருட்களை பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பை உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை உட்பட 12 வகையான பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் அவ்வப்போது கடைகளில் ஆய்வு நடத்தி, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல், பல்லாவரம், செம்பாக்கம் பெருங்களத்தூர் மற்றும் கிழக்கு தாம்பரம் ஆகிய மண்டலங்களில் மாநகராட்சி அலுவலர்களால் நேற்று களஆய்வு மேற்கொண்டு, கடைகளில் இருந்து 280 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா மாநகரை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என தாம்பரம் மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை