தாம்பரத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது: 17 செல்போன்கள் பறிமுதல்

தாம்பரம்: தாம்பரத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 17 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் முகமது வாலித் (24), தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் நேற்று முன்தினம் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறும் போது அவர் வைத்திருந்த சுமார் ஒரு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதுகுறித்து அவர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல நேற்று புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (30) மற்றும் மேற்கு தாம்பரம், கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த ரெவெட்லின் சானு (30) ஆகியோரின் செல்போன்களும் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறும்போது மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தாம்பரம் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் மற்றும் போலீசார் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த மூன்று மர்ம நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் பதில் அளித்ததை தொடர்ந்து போலீசார் அவர்களை சோதனை செய்து பார்த்தபோது அவர்களிடம் செல்போன்கள் இருந்தன.

தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கணேஷ் (51), தாஸ் கிருஷ்ணா (33), அகயா (21) என்பதும், ஒடிசாவில் இருந்து ஒரு கும்பலாக வந்து முடிச்சூர், நேதாஜி நகர் பகுதியில் கடந்த ஒன்றரை மாதமாக வீடு எடுத்து தங்கி தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முயற்சிக்கும் பயணிகளிடம் கூட்ட நெரிசலை உருவாக்கி அவர்களிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்களை பறித்தது விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை செய்து பார்த்தபோது அங்கு குப்பை தொட்டியில் 15 செல்போன்கள் உள்பட மொத்தம் 17 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட இரண்டு சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு