தாம்பரம் 2வது மண்டல குழு கூட்டம் ரூ.5.15 கோடியில் திட்ட பணிகள்: தீர்மானம் நிறைவேற்றம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில் நடந்த மண்டல குழு கூட்டத்தில் ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் சாலை, குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட 33 திட்ட பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை தலைமையில், மாநகராட்சி உதவி ஆணையர் மாரி செல்வி, பொறியாளர் பெட்சி ஞானலதா முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் மண்டலத்துக்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாலை சீரமைத்தல், குப்பை அகற்றுதல், குடிநீர் வினியோகம் என பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் முன் வைத்தனர். மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை உறுதியளித்தார்.

இதனைதொடர்ந்து, சுகாதார பிரிவில் இயங்கும் வாகனங்கள் பழுது சரி பார்த்தல், கழிவுநீர் குழாய் அமைத்தல், பழுதடைந்த மின் மோட்டார்களை அகற்றிவிட்டு, புதிய மின் மோட்டார்கள் அமைத்தல், பழுதடைந்த சிறிய கோபுர மின்விளக்குகளை அகற்றி புதிய சிறிய மின்கோபுர விளக்குகள் அமைத்தல், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, மின்சார பணிகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சுற்றுசுவர் அமைத்தல், மழைநீர் வடிகால்வாய் அமைத்தல், சிறு பாலம் அமைத்தல், பேவர் பிளாக் சாலை அமைத்தல், குடிநீர் தொட்டி அமைத்தல், சிமென்ட் சாலை, தார் சாலை அமைத்தல், அம்மா உணவகத்தில் பழுது சரிபார்த்தல், பூங்கா புதுப்பித்தல் என மொத்தம் ரூ.5.15 கோடி மதிப்பில் 33 தீர்மானங்களுக்கு அனுமதி பெறப்பட்டது.

இக்கூட்டத்தில் மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, வரும் செப்டம்பர் 15ம்தேதி முதல் பெண்களுக்கான உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. எனவே தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், பூங்காக்கள், கோயில்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகிய பகுதிகளில் 500 நபர்களுக்கு ஒரு இடம் என தேர்வு செய்து, எந்த ஒரு இடையூறும் இன்றி பெண்களுக்கான உரிமை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, உத்தர விட்டார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்