தாம்பரம் அருகே கடன் தொல்லையால் விபரீதம்; 8 வயது மகனை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது: கடிதத்தில் பரபரப்பு தகவல்

தாம்பரம்: தாம்பரம் அருகே கடன் தொல்லையால் 8 வயது மகனை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் கைப்பற்றிய கடிதத்தில் நான் இறந்தால் ஏக்கத்தில் மகனும் இறந்துவிடுவான் என்பதால் கொலை செய்தேன் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் பெண்டியாலா கிருஷ்ண செய்தன்யா (33). இவருக்கு வைதேகி (33) என்ற மனைவி, பத்ரி (8), கௌஷிக் (4) என 2 மகன்கள். இவர், குடும்பத்துடன் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பார்வதிநகர் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் செய்தன்யா பலரிடம் சிறுக சிறுக ₹25 லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கடனை திரும்ப செலுத்த முடியாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டுள்ளனர். கடன் தொல்லையில் அவதிப்பட்டு வந்த செய்தன்யா மனஉளைச்சலுக்கு ஆளாகி, பின்னர் மருத்துவ விடுப்பு எடுத்து தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று கடந்த ஓராண்டாக வசித்து வந்துள்ளார். பின்னர் சிறிய அளவில் கடனை அடைத்த பின்னர் மீண்டும் கடந்த மாதம் 20ம்தேதி குடும்பத்துடன் மாடம்பாக்கம் பகுதிக்கு வந்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த செய்தன்யா இன்று அதிகாலை தன்னுடன் அறையில் தூங்கிய மகன் பத்ரியை புடவையால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அதே புடவையில் தூக்கில் தொங்கவைத்துவிட்டு வாட்ஸ்அப் குழுவில், ‘நான் என் மகனை கொலை செய்துவிட்டேன். இந்த தகவல் மனைவி மற்றும் மற்றொரு மகனுக்கு தெரியாது, நானும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’ என பதிவு செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு செய்தன்யா இல்லை. பத்ரி தூக்கில் சடலமாக தொங்கிகொண்டிருந்தார். சேலையூர் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செய்தன்யாவின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது, சென்னை மெரினா கடற்கரையில் ரோந்து பணியில் இருந்த போலீசார், செய்தன்யாவின் செல்போனில் பேசினர். கடற்கரையில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்தோம். அப்போது அவர், தற்கொலை செய்ய மெரினா கடற்கரைக்கு வந்ததாக தெரிவித்தார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என ரோந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மெரினா கடற்கரை சென்ற சேலையூர் போலீசாரிடம் செய்தன்யாவை ரோந்து போலீசார் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, எனது மாமியார் வீட்டு சொத்து, எனது பெற்றோர் சொத்து என அனைத்தையும் நான் அழித்துவிட்டேன். எனது வலி எனக்கு தான் தெரியும் என மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் மறுபடி மறுபடி அதையே கூறியுள்ளார். குடும்ப தேவைக்காக கடன் வாங்கினாரா? அல்லது ரம்மி, ஆன்லைன் சூதாட்டத்திற்காக கடன் வாங்கினாரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை விரக்தியால் தந்தையே மகனை கொன்ற சம்பவம் சேலையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தன்யா எழுதிய கடிதம் சிக்கியது
மகனை கொலை செய்துவிட்டு தற்கொலை முயற்சிக்கு முன்பு செய்தன்யா எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், எனது மகன் பத்ரியை எனக்கு மிகவும் பிடிக்கும். பத்ரிக்கும் என்னை மிகவும் பிடிக்கும். நான் இல்லையென்றால் துக்கத்தில் ஏங்கிஏங்கி இறந்துவிடுவான். எனவே, அவனை என்னுடன் அழைத்து செல்லதான் கொலை செய்தேன். மனைவி வைதேகி 2வது திருமணம் செய்து கொள்ளவேண்டும். 2 பிள்ளைகளை வைத்து தனியாக பார்த்துக்கொள்ள முடியாது என்பதால் பத்ரியை என்னுடன் அழைத்து செல்ல கொன்றேன் என உருக்கமாக அதில் எழுதியுள்ளார்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!