தாம்பரம் அருகே 2 அடி நீள முதலை குட்டி சிக்கியது

தாம்பரம்: தாம்பரம் அருகே எஸ்எஸ்எம் நகர் செல்லும் வழியில் 2 அடி நீள முதலை குட்டியை வனத்துறை அதிகாரிகள் பிடித்து கிண்டி தேசிய பூங்காவுக்கு கொண்டு சென்றனர். தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் பகுதிகளில் நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர் நிலைகளை சுற்றியுள்ள வீடுகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இங்குள்ள நீர்நிலைகளில் பல ஆண்டுகளாக முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் நீர்நிலைகளில் இருந்து முதலைகள் வெளியில் வந்து வீடுகளில் உள்ள கோழி, வாத்து, நாய்கள் மற்றும் கால்நடைகளை வேட்டையாடிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் சிறுவர்கள், பெரியவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வர அச்சப்பட்டு வருகின்றனர். முதலைகளை பிடிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்து வருகின்றனர். ஆனால் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிய பிறகுதான் முதலைகளை பிடிக்க முடியும் என அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு ஆலப்பாக்கம் பகுதியில் இருந்து எஸ்எஸ்எம் நகர் செல்லும் வழியில் புதிதாக போடப்பட்ட 150 அடி சாலையில் 2 அடி நீள முதலைக்குட்டி சாலையோர தடுப்பு அருகில் இருந்ததை பார்த்து சேஷாத்ரி நகர் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையறிந்ததும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையை சேர்ந்த இ.பிரேம்குமார் வந்து, வனத்துறை அதிகாரி வித்யாபதி மற்றும் பீர்க்கன்காரணை ஆய்வாளர் நெடுமாறன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து முதலைக்குட்டியை பிடித்து கிண்டி தேசிய பூங்காவுக்கு கொண்டு சென்றனர். பெருங்களத்தூர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் தொடர்ந்து முதலைகள் பிடிபட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து இருப்பதாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீர்நிலைகளில் உள்ள முதலைகளை பிடித்து செல்லவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பைக்கில் குட்கா கடத்திய வாலிபர் கைது: 15 கிலோ, பைக் பறிமுதல்

பேப்பர் கிடங்கில் தீ விபத்து

கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தின் பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் அச்சம்