தாமரை தலைவரை மாற்றுவதற்கான முனைப்பில் வேகம் காட்டி வரும் மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மன்னர் மாவட்டத்தில் சுவீட் பாக்ஸ் வசூலில் சிக்கிய இன்ஸ் ரொம்பவே பீதியில் இருக்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்தில் இருந்து மலைக்கோட்டைக்கு செல்லும் வழியில் இருக்கிற ‘ஊர்’ல உள்ள ஒரு காவல் நிலைய அதிகாரி அடிக்கடி சுவீட் பாக்ஸ் வாங்க ரவுண்ட்ஸ் போறது வழக்கமா வைச்சிருக்காரு.. இதுகுறித்து தகவல் மாவட்ட அதிகாரிக்கு சென்றதாம்… இதனால், மாவட்ட அதிகாரி மைக்கில் இன்ஸ்சை அழைத்து கேட்டபோது, தான் ரவுண்ட்ஸ் சென்றதாக கூறியிருக்கிறாரு.. என்ன சுவீட் பாக்ஸ் வசூலா என ஓபனா கேட்டவுடனே என்ன சொல்வது தெரியாமல் இன்ஸ் விழிச்சிருக்காரு..

இதனையடுத்து கடுமையாக கண்டித்த மாவட்ட அதிகாரி சப்-டிவிசன் அதிகாரியை கூப்பிட்டு, இவரை பாலோபண்ணி என்ன என்பது குறித்து தகவல் தெரிவிக்க சொல்லியுள்ளாரு.. இதனால் சுவீட் பாக்ஸ் வசூலுக்கு சென்ற இன்ஸ் என்ன நடக்குமோ, ஏது நடக்குமோன்னு பயத்தில் புலம்பி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘தில்லுமுல்லு வெளியே தெரிய வாத்தியாருங்க தான் காரணம் என கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறாராமே மாங்கனி மாவட்ட விசி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டியில தில்லுமுல்லு வேலைகள் கொடிகட்டி பறக்குது. இதுதொடர்பா விசாரணை நடத்திய ஆபிசருங்க, நடவடிக்கை எடுக்க ஆர்டர் போட்டாங்க.. ஆனா, அங்குள்ள விசி, அந்த ஆர்டரை மதிக்காம செயல்பட்டு வராரு.. அதுமட்டுமில்லாம கிண்டிக்காரரோட ஆசியால, மேலும் ஒரு வருசத்துக்கு பதவி நீட்டிப்பையும் வாங்கிட்டாரு.. அதே சமயம், யுனிவர்சிட்டியில நடக்குற ஊழல களையணும்னு அங்குள்ள பிரைவேட் காலேஜ்காரங்க நினைக்குறாங்க..

இதுக்காக அரசுக்கு ஆதரவா செயல்பட முடிவு பண்ணிருக்காங்களாம்.. இத தெரிஞ்சுக்கிட்ட விசி, ெராம்பவே அப்செட் ஆயிட்டாராம்.. ஆனாலும், இவங்கள சும்மா விடக்கூடாதுனு யோசிச்ச அவருக்கு, செமஸ்டர் எக்ஸாம் கைகொடுத்திருக்கு.. அதாவது எக்ஸாம நடத்தி கொடுக்கும் காலேஜிகளுக்கு செலவின தொகையும், வேலை பாக்கும் வாத்தியாருங்களுக்கு மதிப்பூதியமும் கொடுக்கணும்.. ஆனா, எக்ஸாம் முடிஞ்சு பல மாசம் ஆகியும், அந்த தொகைய கொடுக்காம யுனிவர்சிட்டி விசி இழுத்தடிக்கிறாராம்..

இதே போல, யுனிவர்சிட்டி விவகாரங்கள் வாத்தியாருங்க மூலமா தான் வெளிய போகுதுனு நெனச்சு, அவர்களுக்கான புரமோசன் கொடுக்காம ஏமாத்திட்டு வர்றாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆய்வுக்கு போன பெண் ஆட்சியர் அதிரடி கேள்விகளை கேட்க காக்கிகள் கதிகலங்கிட்டாங்களாமே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் பெண் ஆட்சியர் பொறுப்பேற்ற பின் எடுக்கப்படும் நடவடிக்கையால் வருவாய்த்துறை மட்டுமல்ல, காக்கிகள் துறையும் கலங்கி போய் இருக்காங்களாம்..

அவ்வப்போது ஆய்வுக்கு போகும் ஆட்சியர், திடீரென அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு போய் ஆய்வு செய்றாராம்.. சமீபத்தில் மாவட்ட எல்லையோர சோதனை சாவடியில் நள்ளிரவில் ஆய்வு நடத்தி இருக்கிறாரு… அப்ப பதிவேடுகளை பார்வையிட்ட ஆட்சியர், ஒரு நாளைக்கு எத்தனை லாரிகள் மாவட்டத்துக்குள் வருகின்றன என்பதில் தொடங்கி பல்வேறு அதிரடி கேள்விகளை கேட்க அங்கு பணியில் இருந்த காக்கிகள் கதிகலங்கி போய்ட்டாங்களாம்.. இருந்தாலும் நிலைமையை சமாளிச்சு பதில் சொல்லி இருக்கிறாங்க..

மாவட்ட காவல் உயர் அதிகாரி அவ்வப்போது ஆய்வு நடத்தும் நிலையில், ஆட்சியரும் திடீரென சோதனை சாவடியை குறிவைத்து நடத்திய ஆய்வு காக்கிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டாம மேற்படிப்புக்கு போன மலராத கட்சி தலைவருக்கு பதில் சொல்வதில்தான் ஆர்வம் காட்டுகிறாங்கன்னு மாஜிக்கள் மீது தொண்டர்கள் புலம்புறாங்களாமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக் கட்சியின் தலைமையை மட்டுமல்லாது, மாஜிக்களையும் தொடர் வசைபாடுதலில் தன்னை அடையாளம் காட்டி வந்த தாமரைக் கட்சியின் மாநிலத் தலைவர், கல்வி கற்க கடல் கடந்து போயிருக்கிறாரு.. இவரின் குடைச்சலில் தூங்கா நகரத்து இலைக்கட்சியின் மாஜிக்கள் தெர்மாகோலும், உதயமானவரும் ரொம்பவே அப்செட் ஆகி இருந்தாங்க… உள்ளூரை தாண்டினால் உதயமானவரையும், செல்லூரை தாண்டினால் தெர்மாகோலையும் யாருக்கும் தெரியாதுனு தாமரை தலைவரானவர் விமர்சித்து விட்டு விமானம் ஏறிட்டாரு.. இது ரொம்பவே தூங்கா நகரத்து இலைக்கட்சி மாஜிக்களை காயப்படுத்தியதால், இதுவரையிலும் வார்த்தைப் போரில் இருந்தவங்க..

இப்போது தாமரையின் மாநில தலைவரை மாற்றும் வரை ஓயக்கூடாதென்ற உறுதியோடு தாமரையின் மேலிடங்களை அணுகிப் பேசி வர்றாங்களாம். அத்தோடு தாமரைக்கட்சியில் இப்போது பொறுப்பு பணிக்கு வந்திருப்பவர்களை திறமையுடன் அனுபவமானவர்கள் என புகழ்ந்தும் அவர்களை வளைத்துப்போட்டு வருகின்றனராம்.. தாமரை மாநில தலைவரின் வெளிநாட்டு பயணத்தால், இக்கட்சி தொண்டர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறதாம்..

தமிழகமே அமைதி நிலைக்கு திரும்பி இருக்கிறதென இலைக்கட்சியின் உதயமானவர் சமீபத்தில் ஸ்டேட்மென்ட் விடுத்து, அங்கேயே இருந்திடுங்கனு அவருக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறாரு… ஒழுங்கா இருக்குற எங்க ஆளுகளை தாமரை தலைவர் தன்னை வளர்த்துக்கிறதுக்காக உசுப்பேத்தி விடுறாரு.. அதுக்கு பதில் சொல்லிக்கிட்டு, இலைக்கட்சி வளர்க்குறதுல கவனம் காட்டாமல், கண்டதுக்கும் பரபரப்பாக பதில் சொல்லிக்கிட்டு காலம் கடத்துறாங்களே? முதல்ல இவங்களையும் மாத்திடணும்னு தூங்கா நகரத்து இலைக்கட்சி தொண்டர்கள் ரொம்பவே புலம்பி தவிக்கிறாங்களாம்…’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்