தாமரை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தென்சென்னையில் மாற்றத்தை கொண்டு வந்தே தீருவேன்: தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் வாக்குறுதி

சென்னை: தென்சென்னை தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தாமரை பூவை காட்டி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பிரசாரத்தில் ஈடுபடுவது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் அவர் செல்லும் பகுதிகளில் ஏராளமான பெண்கள் திரண்டு வந்து ஆரத்தி எடுத்தும் மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். ‘அக்கா வந்திருக்கிறேன்’ என்று கூறி அவர்களிடம் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருவது தொகுதி முழுவதும் அவரை பிரபலமடையச் செய்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். தரமணி பஸ் டிப்போ, தரமணி லிங்க் ரோடு எஸ்பிஐ வங்கி அருகில், காந்தி சாலை டேவிட் ஸ்கூல் அருகே, அடையார் ஆனந்த பவன், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் திறந்த ஜீப்பில் நின்றவாறு வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர்கள் மத்தியில் பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது: தென்சென்னையில் பல்வேறு பகுதிகள் அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. தென் சென்னையில் மாற்றம் வேண்டும், என்றால் மக்கள் எனக்கு (தாமரை) வாக்களிக்க வேண்டும். நான் ஆளுநராக இருந்தபோது ராஜ்பவனில் புகார் பெட்டி வைக்கும் நடைமுறையைக் கொண்டு வந்தேன். இந்த நடைமுறையைத் தென்சென்னையில் உள்ள 6 சட்டமன்ற அலுவலகங்களிலும் செயல்படுத்துவேன்.

அதில், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அந்த புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நான் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், குறிப்பிட்ட நாள்களில் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதை சரிசெய்வேன். தென்சென்னையில் தாமரை மலர்ந்தே தீரும். ஆளுநர் பதவியை விட்டுவிட்டு மகாராணியாக இருந்த நான், மக்கள் ராணியாக வருகிறேன். மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்வதற்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா