நாடாளுமன்ற தேர்தலில் இலையுடன் கூட்டணி அமைக்க மாங்கனி கட்சி முடிவெடுத்துள்ளதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மாம்பழ கட்சியை சேர்ந்தவருக்கு வந்த சோதனை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி கூட்டணியில் மாம்பழம் கட்சி இணைந்து கடந்த எலெக்சனை சந்திச்சாங்க. ஆனா, எம்எல்ஏ தேர்தலில் இக்கட்சி நினைச்ச இடத்தை பிடிக்க முடியல. தற்போதுள்ள நிலையில் இலைக்கட்சியோட கூட்டணியில் நாங்க இல்லைன்னு மாம்பழ கட்சி சொல்லிட்டு வர்றாங்க. ஆனா வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதே கூட்டணியில் இணைந்து மாங்கனி தொகுதியை பிடிச்சிடணும் என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம்.

ஆனால் யாருடன் கூட்டணி என்பதில் மட்டும் மாம்பழ கட்சி ரொம்பவே கவனமாக இருக்காம். கூட்டணி ரகசியத்தை கசியவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். இதற்காக வேட்பாளரையும் மாம்பழ கட்சி முடிவு செஞ்சி, அவரை களத்தில் இறக்கியிருக்கு. மாஜி எம்எல்ஏவான அவர் ஊர் ஊரா போய் கட்சியை வளப்படுத்திக்கிட்டு வருகிறாராம். இந்நிலையில் வேட்பாளர் தேர்வு கனவில் இருக்கும் நபரின் தலையில் இடி விழுந்த கதையாக இடிந்து ேபாய் உட்கார்ந்துள்ளாராம்.

அதாவது, எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட இவர் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தாராம். இவருக்கு கடன் கொடுத்த பைனான்சியர் எல்லோருக்கும் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்திட்டாராம். யார் யாருக்கெல்லாம் கடன் கொடுத்தேன். எவ்வளவு தொகை தரணுமுங்குற தகவலையும் கோர்ட்டுல தெரிவிச்சிருந்தாராம். அந்த பட்டியலில் சேலம் மாம்பழ கட்சி மாஜியின் பெயரும் இருக்காம். இத நீதிமன்றமும் உன்னிப்பா கவனிச்சி, வாங்கிய கடனை வட்டியோட கொடுக்கணுமுன்னு மாம்பழ மாஜிக்கு உத்தரவு போட்டிடுச்சாம். இலையுடன் கூட்டணி அமைக்கும் விஷயம் கனிந்து வரும்போது கடன் வடிவில் சிக்கல் வந்துள்ளது..

இது தேர்தலில் கூட்டணியை பாதிக்குமா என்று மாங்கனி தரப்பு வருத்தத்துல இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சைலண்ட் மோட்’ பெண் கவுன்சிலர்னு யாரை சொல்றாங்க… அவரு எந்த கட்சி…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 3 வார்டுகளில் மட்டுமே அதிமுக வென்றுள்ளது. இவர்களில் ஒருவர், பெண் கவுன்சிலர். மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து, மாநகராட்சி கமிஷனர் அன்றாடம் அதிகாலை ஆய்வு மேற்கொள்கிறார்.

அப்போது, கவுன்சிலர்கள் போட்டி போட்டுக்கொண்டு, தங்களது வார்டுகளுக்கு தேவையான பணிகளை கேட்டுப் பெறுகின்றனர். ஆனால், அதிமுகவை சேர்ந்த நான்கு எழுத்து பெயர் கொண்ட ஒரு பெண் கவுன்சிலர், கள ஆய்வுக்கு செல்வது இல்லையாம். தனது வார்டுக்கு தேவையான பணிகள் குறித்து கமிஷனரிடம் அல்லது மேயரிடம் முறையிட்டு பெறுவதும் இல்லையாம். அவர்களாகவே செய்தால் செய்யட்டும்… இல்லாவிட்டாலும் பரவாயில்லை… என ஒதுங்கி விடுகிறாராம். அதனால், இந்த கவுன்சிலருக்கு ‘சைலண்ட் மோட் கவுன்சிலர்’ என பெயர் சூட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மீனவ மக்களுக்கு எந்த கட்சி மீது பாசம், போய் கோஷம் வந்ததாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கன்னியாகுமரியில் தாமரை கட்சியினருக்கு மீனவ மக்கள் மீது திடீர் பாசம் பொத்துக்கொண்டு வந்துள்ளது. உங்களுக்காக குரல் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறி கடலோர கிராமங்களில் கூட்டம் போட்டு, வரும் மக்களவை தேர்தலுக்கு ஆதரவு திரட்டுறாங்க. பொன்னானவர் தலைமையில் நடக்கின்ற இந்த கூட்டத்தில் கட்சியில் தீவிரமாக செயல்படுகின்றவர்களை அழைத்து செல்வது இல்லையாம். இதற்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ நாங்கள் உள்ளே நுழைந்து கூட்டம்போடுவதே எங்களுக்கு வெற்றிதான் என்று தாமரை நிர்வாகிகள் கூறி வருகின்றனராம்.

ஆனால் ஒகி புயல் வேளையில் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தபோதும், அவர்கள் இறந்த நிலையில் நூற்றுக்கணக்கானவர்களின் உடல்களை மீட்க கப்பலையோ, வேறு ஏற்பாடுகளையோ செய்யாதவர்கள் எந்த முகத்தோடு எங்களை பார்க்க வருகின்றனர் என்று முகத்துக்கு நேராக வறுத்தெடுக்கிறார்களாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘காட்டுக்குள்ள தனி ராஜ்ஜியம் நடத்தும் டிரைவரை பார்த்து அதிகாரிகள் நடுங்குவதை பற்றி பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ வெயிலூர் மாவட்டத்துல, ஒடுக்கமான ஊர்ல மலைகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர்ல காடுகளும் பரந்து விரிஞ்சு இருக்குது.

இங்க தலைமை பாரஸ்ட் அதிகாரிக்கு ஓட்டுனராக இருக்குற ஒருத்தரு தனி ராஜ்ஜியம் நடத்தி வர்றாராம். இவரு வாகனத்தை எடுத்துகிட்டு, நகர்வலம் செல்வது போல், காட்டுப்பகுதிக்கு போயி, ஆடு, மாடு மேய்க்கிறவங்கள்ல இருந்து விறகு சேகரிக்க வர்றவங்க வரைக்கும் வசூல் வேட்டை நடத்துறாராம். ஆடு, மாடு மேய்க்க ஒரு ரேட், விறகு சேகரிச்சா ஒரு ரேட்டுன்னு அவர் காட்டுல கரன்சி மழை பெய்யுதாம். அதிகாரிங்க கேள்வி கேட்டா… உடனே அவங்கள பத்தி, சிறப்பு தனிப்பிரிவுக்கு எக்குதப்பா, போட்டு கொடுத்துடுறாராம்.

இதனால, தங்களோட பணி உயர்வுக்கு ஏதாவது பாதிப்பு வந்துடுமோன்னு பயந்து, பொய் புகார்களுக்கு வனத்துறையில இருக்குறவங்களே தங்களோட, கை காச போட்டு அபராதத்தை கட்டுறாங்களாம். அதோட, அந்த ஓட்டுனருக்கும் சம்திங் போகுதாம். இப்படி, கல்லா கட்டுற அவருக்கு தனிப்பிரிவு அதிகாரிங்க சிலர் உடந்தையா இருக்குறாங்களாம். பாரஸ்ட் ஆபிசர்ஸ், அந்த ஓட்டுனரை பத்தி மேலதிகாரிங்க கிட்ட சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது