இடைத்தேர்தலை புறக்கணித்து குற்றாலத்துக்கு கிளம்பிய குக்கர் பார்ட்டிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மும்மூர்த்தி போஸ்டர் பரபரப்பை கிளப்பியிருக்காமே…’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டத்தில் இலை கட்சியை சேர்ந்த மும்மூர்த்திகள் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், பரபரப்பை ஏற்படுத்தி இருக்காம். இவர்கள் மூவரும், இலை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆவர். கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு கண்டித்து ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், தற்போது பொறுப்பில் இருக்கும் அந்த முக்கிய நிர்வாகி படம் இல்லையாம்.

அவரு படம் இல்லாமல், இவர்கள் மூவர் படத்துடன் மட்டும் போஸ்டர் அடிச்சி ஒட்டி இருக்காங்க. ஏற்கனவே நாடாளுன்ற தேர்தலில் டெபாசிட் இழந்த பிரச்னை இன்னும் கட்சிக்குள் பூதாகரமாக இருக்க , இவர்கள் மூன்று பேர் இணைந்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், கட்சி தற்போது இருக்கும் நிலையில் இருந்து தனியாக உடையுதோ என்ற எண்ணத்தை கட்சி தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்காம். மூவரில் ஒருவர் முன்னாள் அமைச்சர், ஒருவர் முன்னாள் எம்.எல்.ஏ. சமீபத்தில் தான் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தால் இவர் விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எது இவர்கள் மூவரையும் ஒன்றாக இணைத்துள்ளது என்ற பேச்சும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாகி உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்து குற்றாலம் சென்றார்களாமே மன்னர் மாவட்ட குக்கர் கட்சி நிர்வாகிகள்’’ என்றார்  ‘‘விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ம்தேதி நடை பெறுகிறது. இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தாமரை கூட்டணியில் மாம்பழம் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார்.

மாவட்டம் முழுவதில் இருந்து தாமரை, மாம்பழம், குக்கர் கட்சிகள் நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னர் மாவட்டத்தில் இருந்து மட்டும் குக்கர் கட்சி நிர்வாகிகள் பிரசாரத்திற்காக செல்ல தயாராக இருந்தனர். ஆனால் இவர்களை தாமரை, மாம்பழம் கட்சியினர் கொஞ்சம் கூட மதிக்க வில்லை. இதனால் குக்கர் கட்சி நிர்வாகிகள் அவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருக்காங்க. குறிப்பாக ‘ வி்ட்டமின் ப’ எதுவும் நிர்வாகிகளுக்கு வரவில்லையாம்…

இதனால் கைகாசு போட்டு தேர்தல் வேலை பார்க்க முடியாது என அவர்களது தலைமையிடத்தில் கறாராக கூறிவிட்டார்களாம். தலைமையும் இதை கேட்டுக்கொண்டு பதில் எதுவும் அவர்களிடம் தெரிவிக்க வில்லையாம்… இதனால் மன்னர் மாவட்ட நிர்வாகிகள் ஜாலியாக குற்றாலம் சென்று விட்டார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காணாமல் போன செல்போனை மீட்டு திருப்பித் தர்றதுலயும் காசு பாத்தாங்களாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.

‘‘குயின்பேட்டை மாவட்டத்துல கடந்த சில மாதங்களுக்கு முன்னாடி செல்ேபான்கள் தொலைந்து போனதாக பல பேரு புகார்கள் கொடுத்திருந்தாங்க. அதுல மாவட்டத்துல இருக்குற 2 சப்-டிவிஷன்கள்ல இருக்குற காக்கிகள் நிலையத்துல, சைபர் கிரைம் காக்கிகள் தொலைந்து போன 120 செல்போன்கள் வரைக்கும் கண்டுபிடிச்சாங்களாம். அதை போன் உரிமையாளர்கள் கிட்ட ஒப்படைக்குற நிகழ்ச்சி மாவட்ட உயர்காக்கி அலுவலகத்துல நடந்திருக்குது.

அதுல ஒரு சில பேருக்கு மட்டும் உயர் காக்கி செல்போனை வழங்கினாராம். அப்புறம் கொடுத்தவங்க கிட்ட சமந்தப்பட்ட காக்கிகள் நிலையத்துல செல்போன் உரிமையாளர்களிடம் ரூ.500ல இருந்து ரூ.1000 வரைக்கும் பீஸ் வாங்கிட்டுத்தான் செல்போன் கொடுத்தாங்களாம். இந்த செல்போன் பீஸ் மேட்டர் தான் இப்ப குயின்பேட்டை மாவட்டத்துல ஹாட் டாப்பிக்காக காக்கிகள் வட்டாரத்துல பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தலைமைக்கும் துணைத் தலைமைக்கும் தொடர் மோதலாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரில் தாமரைக்கட்சியின் மாவட்ட தலைமைக்கும், துணைத்தலைமைக்கும் மோதல் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். சமீபத்தில் தாமரைகள் தடை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதான நிலையில், போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கு தலைமையானவர் டீ கூட வாங்கித் தரவில்லையாம். அதேசமயம், துணைத்தலைமை பிரியாணி ஆர்டர் செய்து விநியோகித்தாராம்.

இதனால் மாவட்ட தலைமை தரப்பு டென்ஷன் ஆகி, தனிக்கூட்டம் போட்டு தனியாக யாரும் செலவழிக்கக் கூடாதென தீர்மானம் போடப்பட்டதாம். இது, துணைத்தலைமை உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கு கடும் ஆத்திரத்தை தந்துள்ளது. வர்ற பணத்தை எல்லாம் வெளியில எடுக்காம, மாதந்தோறும் கட்சிக்கு பராமரிப்பு தொகையாக கட்சிக்காரங்க ஒவ்வொருத்தரும் தந்தாகணும்னு மாவட்டத்தலைமையானவர் கறார் காட்டுறாரு. கட்சிக்கு வர்ற பணத்தை செலவழிக்கிறதில்லை. செலவழிக்க முன்வர்ற துணைத்தலைமையானவரை, அவர் பெரிய ஆளாக வளர்ந்திடுவார்னு அதையும் அனுமதிக்கிறதில்லை.

கட்சி ஆபீசுக்கு மூணு மாசமா வாடகை பாக்கி இருக்கு. அதையும் கட்டக்காணோம் என்று புலம்பித் தவித்து வருகின்றனராம். சமீபகாலமாக ஒவ்வொரு கட்டத்திலும் மாவட்டத்தலைமை, துணைத்தலைமை இடையேயான மோதல் உச்சம் தொட்டு, எப்போது வேண்டுமானாலும் உடைந்து தெரித்து களேபரமாகும் நிலைக்கு போயிருக்கிறதென்கின்றனர் கட்சியினர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரியில் கஞ்சா ஒழிப்பில் பொம்மலாட்டம் ஆடுதாமே காவல்துறை..’’

‘‘புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அரசின் செயல்பாடுகளை முடக்கும் நோக்கில் ஒன்றிய அரசால் புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்ட மாஜி ஐபிஎஸ் ஆன கிரண்பேடி, அரசின் நடவடிக்கையில் மட்டுமல்ல சட்டம்- ஒழுங்கு பராமரிப்பிலும் மூக்கை நுழைத்து கோலோச்சினார். இதனால் அவரது பணி காலத்தில் காவல்துறை ஆட்டம் கண்டிருந்தது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படவே இசை தமிழ் கவர்னராக பதவியேற்றபின், அமைதி காத்த காவல்துறை மீது கஞ்சாவை கட்டுப்படுத்த தவறி விட்டதாக புகார்கள் எழுந்தன. இதனிடையே நாடாளுமன்ற தேர்தலுக்காக இசைதமிழ் நடையை கட்டவே, புதிய கவர்னராக சிபிஆர் பதவியேற்றார்.

அப்போது கஞ்சாவை ஒடுக்குவதில் தீவிரம் காட்டுவேன் என்று உறுதிஅளித்த சிபிஆர், டிஜிபியை அழைத்து பணிகளை முடுக்கினார். ஆனால் ஜார்க்கண்ட் கவர்னரான சிபிஆர், அவ்வப்போது பணிநிமித்தமாக வெளியூர் பறந்து விடும் நிலையில் அப்போதெல்லாம் சகஜ நிலைக்கு திரும்பும் காவல்துறை, அவர் புதுச்சேரி வருகிறார் என்றதும் காவல் சரகங்கள் வாரியாக ரவுடி வீடுகளில் ரெய்டு, கஞ்சா சோதனைகள், போதை பொருள் வழக்குகள் என தடாலடி காட்டுகிறது. கவர்னர் இருந்தால் ஒரு நிலை, இல்லாவிட்டால் வேறு நிலை என்ற புதுச்சேரி காவல் துறையின் பொம்மலாட்ட ஆக்டிங்கை பார்த்து பொதுமக்களே வாயடைத்து போய் இருக்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

 

Related posts

சொல்லிட்டாங்க…

தாயுடன் மீனவர் உல்லாசம் அடித்து கொன்ற மகன்கள்: தன்னுடன் தொடர்பை கைவிட்டதால் போட்டு கொடுத்த முதியவர்

போலீஸ் கணவன் விஷம் குடித்து தற்கொலை கர்ப்பிணி மனைவியும் தூக்கிட்டு சாவு