சைலன்ட் மோடுக்கு போன மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

 

‘‘டீத்தூள் தொடங்கி உணவுபொருட்கள் வரை போலி நடமாட்டம் அதிகரித்தாலும் கடமைக்கு சோதனையிடுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு வருதாமே…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர், குயின்பேட்டை, மிஸ்டர்பத்தூர் மாவட்டங்களில் டீக்கடைகள்ல போலியான டீத்தூள் பயன்பாடுதான் அதிகமா இருக்காம்.. குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமா இருக்கிற மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், சாலைகளில் உள்ள கடைகள்ல போலியான டீத்தூளை பயன்படுத்துற கடைக்காரர்கள் அதிகமாம்.. ஏற்கனவே பயன்படுத்தின டீத்தூளை கடைக்காரர்களிடமே வாங்கிச் சென்று, அதில ரசாயன கலர கலந்து மீண்டும் குறைந்த விலைக்கு அவர்களிடமே விற்று விடுகிறாங்களாம்.. லாபத்தை கருதி சில கடைக்காரங்களும் அதை தெரிந்தே வாங்குறாங்களாம்.. இதுபற்றி பொதுமக்கள் புகார் தெரிவித்தால், இதுதான் ஒரிஜினல் என்று சொல்லி சமாளிக்கிறார்களாம்.. குறிப்பா இந்த புகார் வெயிலூர் மாவட்ட நிர்வாகம் வரைக்கும் சென்றிருக்கு.. கலெக்டரின் அதிரடிக்கு பிறகு வெயிலூரின் குப்பமான பகுதியில் போலி டீத்தூள் தயாரித்து பாக்கெட் போட்டு வைத்திருக்கும் கிடங்கு ஒன்றை உணவு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அரை டன் போலி டீத்தூளை கைப்பற்றியதுடன், கிடங்காக செயல்பட்ட வீட்டுக்கும் சீல் வச்சிருக்காங்க.. ஆனால் இங்கு டீத்தூள் தயாரிப்பது, அங்கிருந்து கடைகளுக்கு விற்பனை செய்வது வரை அவர்களுக்கு முன்கூட்டியே தெரியுமாம்.. மாவட்ட நிர்வாகமே நேரடியாக தலையிட்டதால்தான் இந்த நடவடிக்கையை அவர்கள் எடுத்தாங்களாம்.. இது டீத்தூளில் மட்டும் இல்லையாம். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பழங்கள், குளிர்பானம் முதல் உணவு பொருட்கள் வரை அனைத்திலும் போலி நடமாட்டம் இருக்காம்.. அதனால கடமைக்காக சோதனையில ஈடுபட்டு வரும் உணவு அதிகாரிகள் மீது கடுமையான அதிருப்தியே அதிகரிச்சிருக்காம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

‘‘சைலண்ட் மோடில் போயிருக்கிறாராமே இலை கட்சி மாஜி அமைச்சர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புரம் என முடியும் மாவட்டத்தின் இலை கட்சியில், வட மாவட்டத்தில் நான்தான் பிரபலம் என, அட்ராசிட்டி செய்து வரும் மாஜி அமைச்சர், பாஜ, பாமகவை வம்புக்கு இழுத்து விமர்சிப்பதில் வல்லவராம். கடந்த மக்களவை தேர்தலில் இபிஎஸ்சின் தூதுவராக செயல்பட்ட மாஜி அமைச்சர், இலை கட்சியின் படுதோல்விக்கு பிறகு வாய் திறப்பதை நிறுத்திவிட்டாராம். சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்த தொகுதிக்கு சென்று பிரஸ் மீட் கொடுத்த போதும் பாஜ, பாமகவை விமர்சிக்கவில்லையாம். இதே தொகுதியில் பிரசாரத்துக்கு வந்த அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் எடப்பாடியை தாக்கி கடுமையாக விமர்சித்து இருந்தனர். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோதும் வாய் திறக்காமல் நழுவினாராம். இது அவர்கள் கட்சியினருக்கு ஷாக் ஏற்பட்டு விசாரித்தபோது, இபிஎஸ்சுக்கு தெரியாமல் சின்ன மம்மி, ஓபிஎஸ் தரப்பை சந்தித்ததாகவும், எதிர்காலத்தில் வெற்றி பெற கட்சியை ஒன்று சேர்க்க வேண்டும் என பேசி இருக்கிறாராம். இதனால் கடுப்பான இபிஎஸ், கூட இருந்தவர்களை முதலில் கடுமையாக விமர்சித்துவிட்டு ஒன்று சேராத வகையில் செயல்பட்டீர்கள். ஆனால் இன்று இப்படி பேசுகிறீர்கள் என்று டென்ஷனாகிய அவரும், உங்கள் மாவட்டத்தில் ஒன்று சேர்ந்து என்னை தாக்கி பேசி இருக்கிறார்கள். ஆனால் ஒரு வார்த்தை கூட நீங்கள் பதிலுக்கு பேசவில்லை ஏன்? என்று கேட்டுள்ளாராம். இதனால் மாஜி அமைச்சர் வீர வசனம் பேசுவதை நிறுத்திவிட்டு சைலண்ட் மோடில் இருக்கிறாராம். வட சென்னைல இவரின் பேச்சை நம்பி, கட்சி நிர்வாகிகள் பலரை இழந்ததுதான் மிச்சம் என இபிஎஸ்சும் புலம்பி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சுற்றுப்பயணத்தின் போது சின்னமம்மிக்கு எதிராக பேட்டி கொடுக்க தயங்கும் இலை கட்சி முக்கிய நிர்வாகிகள் பற்றி சொல்லுங்க’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தென்மாவட்டங்களில் சின்னமம்மி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது மல்லிக்கு பெயர் போன மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியை சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவர், சின்ன மம்மிக்கு எதிராகவும், அவரை கிண்டல் அடித்தும் மீடியாவில் பேட்டி கொடுத்தார். தென்மாவட்டத்தை தொடர்ந்து மலைக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு சின்னமம்மி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சின்னமம்மி வருகை தருவதற்கு முன்பே, அவருக்கு எதிராக மாஜி அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பேட்டி கொடுக்க வேண்டும் என கட்சி மேலிடத்தில் இருந்து அவர்களுக்கு ரகசிய உத்தரவு வந்ததாம்… ஆனால், மாஜி அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், சின்னமம்மிக்கு எதிராக பேட்டி கொடுக்க தயக்கத்தில் இருந்து வருகிறார்களாம்…
இந்த தகவல் சேலத்துக்காரர் டீம், அவரது கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில் உச்சகட்டத்துக்கு சென்ற சேலத்துக்காரர், போனில் நிர்வாகிகளை பயங்கரமாக கடிந்து கொண்டுள்ளார். இதனால் மாஜி அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் டெல்டா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சின்னமம்மிக்கு எதிராக பேட்டி கொடுக்கலாமா அல்லது கண்டு காணாமல் இருந்து விடலமா என அவர்களது ஆதரவாளர்களிடம் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதெல்லாம் இருக்கட்டும்…ஆனா சின்ன மம்மியின் சுற்றுப்பயணம் நமுத்துப் போச்சு என அவரது ஆதரவாளர்களே சொல்கிறார்களாமே..’’ என கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘உண்மைதான்… தென்மாவட்டங்களில் மீண்டும் ஆதரவு வட்டத்தை பலப்படுத்தும் நோக்கில் தென்காசியில் சின்ன மம்மி தொடங்கிய ஒருங்கிணைப்பு பயணத்தில் கடைசி வரை உருப்படியாக எதுவுமே தேறவில்லையாம். இலை தரப்பில் ஓரம் கட்டப்பட்டிருக்கும் ஒருசில மூத்த முன்னோடிகள் மட்டுமே, சின்ன மம்மியை சந்தித்து கட்சி குறித்து புலம்பிவிட்டு சென்றார்களாம். அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லையாம். சின்ன மம்மியிடம் ஒருகாலத்தில் தீவிர விசுவாசம் காட்டிய இலை தரப்பு நிர்வாகிகள், எங்கே நேரில் சந்திக்க நம்மை அழைத்து விடுவாரோ என்ற அச்சத்தில், பலர் தென்காசி மாவட்டத்தையே அன்றைய தினத்தில் காலி செய்துவிட்டு சென்று விட்டார்களாம். சின்ன மம்மியின் ஒருங்கிணைப்பு பயணம் எப்படி இருக்க போகிறது என இலை தரப்பும் ஆர்வம் காட்டிய நிலையில், முக்கிய பிரமுகர்கள் தலைதெறிக்க ஓடியது, இலை தரப்பை கூடுதல் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. குக்கர் பார்ட்டிகளும் கூட கடைசி வரை அடக்கி வாசித்ததுதான் இதில் ஹைலைட். ஆனால் சின்ன மம்மி தரப்போ விரைவில் நாம் ஒன்று கூடி விடுவோம். அதனால்தான் இந்த அடக்கி வாசிப்பு என்று சமாளிக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பு ; டிஎஸ்பி சஸ்பெண்ட்: வாட்ஸ்அப்பில் அழகிகளின் படங்கள் சிக்கியது

வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு