ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான தாசில்தார் வீட்டில் சோதனை ரூ.45 லட்சம் பறிமுதல்: அருப்புக்கோட்டையில் பரபரப்பு

அருப்புக்கோட்டை: பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் வாங்கி கைதான தாசில்தார் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், ரூ.45 லட்சம் பணம், ஆவணங்களை பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம், அமராவதிபுதூரை சேர்ந்தவர் கருப்பையா. இவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அப்போது தாசில்தார் தென்னரசு, பட்டா மாறுதல் செய்ய ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுபற்றி கருப்பையா ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 1 லட்சம் ரூபாய் நோட்டுகளை, நேற்று முன்தினம் தாசில்தாரிடம் கருப்பையா கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு துறையினர், தாசில்தார் தென்னரசை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதனிடையே, தாசில்தார் தென்னரசின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி ஜெயராம் நகரில் உள்ள வீட்டில், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, விருதுநகர் இன்ஸ்பெக்டர் சால்வன் துரை தலைமையிலான போலீசார் நேற்று மாலை 4 மணியளவில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ..45 லட்சம் பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். இரவு வரை தொடர்ந்து சோதனை நடைபெற்றது.

Related posts

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!