சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!

மும்பை: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையை வென்ற நிலையில் ஓய்வை இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் ஏற்கனவே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் ஜடேஜாவும் ஓய்வு அறிவித்துள்ளார்.

பார்படாஸில் நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று அசத்தியது.

2007ம் ஆண்டு பெற்ற வெற்றிக்கு பின்னர் 17 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ரசிகர்கள் மனதில் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதி போட்டி முடிந்த பின்னர் இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது மூன்றாவதாக மற்றொரு சீனியர் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனது சமூக வலைதள பக்கத்தில் ஜடேஜா பதிவிட்டுள்ளதாவது; “முழு மனதுடன் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். டி20 சர்வதேச போட்டிகளில் இது என்னுடைய கடைசி போட்டி. இவ்வளவு தூரம் நான் இந்திய அணிக்காக இந்த வடிவத்தில் விளையாடியது மிகவும் பெருமையான ஒன்று. என்னுடைய திறன் அனைத்தையும் நான் எனது நாட்டிற்காக வழங்கி உள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

டி20 வடிவத்தில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் மற்ற வடிவங்களில் தொடர்ந்து விளையாடுவேன். டி20 உலக கோப்பை வெல்ல வேண்டும் என்ற கனவு இந்த தொடரின் மூலம் நிறைவேறியுள்ளது. எனக்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி நிறைய நினைவுகள் என்னுள் இருக்கின்றன. அதனை மகிழ்ச்சியுடன் தொடர்வேன்” என தெரிவித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஜடேஜா இந்திய அணிக்காக 74 டி20 போட்டிகளில் விளையாடி 515 ரன்கள் மற்றும் 54 விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளார்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு நாளை மாலைக்கு ஒத்திவைப்பு!

வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற வாலிபர் அதிரடி கைது: 28 மாத்திரைகள் பறிமுதல்

உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சி கூட்டநெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு..!!