டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை

துபாய்: சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை ஹர்திக் பாண்டியாவுக்கு கிடைத்துள்ளது. சமீபத்தில் நடந்த ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஹர்திக், டி20 ஆல்ரவுண்டர் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி இலங்கையின் வனிந்து ஹசரங்காவுடன் நம்பர் 1 அந்தஸ்தை பகிர்ந்துகொண்டுள்ளார். உலக கோப்பையில் 144 ரன் (சராசரி 48.00, ஸ்டிரைக் ரேட் 151.00) விளாசிய ஹர்திக், 11 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். ஸ்டாய்னிஸ் (ஆஸி.), சிக்கந்தர் (ஜிம்பாப்வே), ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்) டாப் 5ல் உள்ளனர்.

உலக கோப்பையில் 15 விக்கெட் சாய்த்து தொடர் நாயகன் விருது பெற்ற இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் ஒரேயடியாக 12 இடங்கள் முன்னேறி 12வது இடத்தை பிடித்துள்ளார். சுழல் நட்சத்திரம் குல்தீப் யாதவ் 3 இடங்கள் முன்னேறி ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸம்பாவுடன் 8வது இடத்தை பகிர்ந்துகொள்ள, உலக கோப்பையில் விக்கெட் வேட்டை நடத்திய இந்திய வேகம் அர்ஷ்தீப் சிங் 4 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 13வது இடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்தின் அடில் ரஷித், அன்ரிச் நோர்க்யா (தெ.ஆப்.), டி சில்வா (இலங்கை) முதல் 3 இடங்களில் உள்ளனர். டி20 பேட்டிங் தரவரிசையில் டிராவிஸ் ஹெட் (ஆஸி.), சூரியகுமார் (இந்தியா), ஃபில் சால்ட் (இங்கிலாட்ந்து), பாபர் ஆஸம் (பாக்.), முகமது ரிஸ்வான் (பாக்.) டாப் 5ல் உள்ளனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: உதயநிதி ஸ்டாலின்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்

பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது