நீச்சலே பெண்களின் பல பிரச்னைகளுக்கும் நிரந்தரத் தீர்வு!

டெலிவரி ஆனதில் இருந்தே என்னால் கனமான பொருட்களைத் தூக்க முடியவில்லை, இதில் ஒர்கவுட்டா சான்சே இல்லை‘, ‘என்ன ஒர்கவுட் செய்தாலும் இடுப்பிலே போட்ட ஊசி வலியெடுக்குதுப்பா’, கொஞ்ச நேரம் வேகமா நடந்தால் கூட உடனே மூச்சு வாங்குகிறது, எனர்ஜி மொத்தமும் காலியாகிடுது’… இதுதான் இன்று பல பெண்களின் கவலையாக உள்ளன.பொதுவாகவே தாமதமான குழந்தைப்பேறு, அறுவை சிகிச்சையால் உண்டாகும் உடல் மாற்றங்கள், ஹார்மோன்கள் மாற்றம் காரணமாக உடலில் உண்டாகும் அதிகப்படியான எனர்ஜி இழப்பு என அனைத்துமாக இன்று உடற்பயிற்சி பல பெண்களுக்கும் எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கிறது. சிலர் அதையும் மீறி உடற்பயிற்சி செய்தாலும் கூட பின் விளைவுகள் உண்டாகின்றன. எல்லோராலும் தனியாக ஒரு பயிற்சியாளர் வைத்துக்கொண்டு அவரவர் உடல் வாகுக்கு ஏற்ப உடற்பயிற்சி எடுக்கும் அளவிற்கு பொருளாதாரமும் கிடையாது. என்கையில் பட்ஜெட்டில் , பெண்களுக்கு பல வகைகளில் பயன்களை அள்ளிக் கொடுக்கும் நீச்சல் பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்கிறார் பிரபல நீச்சல் பயிற்சி மையத்தின் தலைமை நிர்வாகி மற்றும் நீச்சல் பயிற்சியாளர் தர்ஷினி பாலகிருஷ்ணன்.

‘ நீச்சல் மட்டுமல்ல நீருக்குள் செய்யப்படும் அத்தனை உடற்பயிற்சிகளும் பெண்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டவை. பொதுவாகவே நம் உடலின் எடை தரையில் இருப்பதை காட்டிலும் நீரில் எடை குறைவாகவே உணர்வோம். எனவே தரையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறோம் எனில் நீரில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி செய்ய இயலும். பொதுவாகவே நீருடன் இணைந்து அத்தனை உடற்பயிற்சிகளும் உடற்பயிற்சியாக மட்டுமல்லாமல் உடன் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கக் கூடியது. மேலும் நீரில் எனர்ஜி இழப்பு என்பது தாமதமாகவே நிகழும். காரணம் நீருக்குள் நமக்கு வியக்காது இன்னும் காரணத்தால் வியர்வை மூலம் எனர்ஜி வெளியேறுவது அங்கே கட்டுப்படுத்தப் படும். அதேபோல் தரையைப் பொறுத்தவரை எந்த உடற்பயிற்சியானாலும் நம் உடலின் முழு கனத்தையும் நம் முதுகுத்தண்டும் கால்களின் எலும்புகளும்தான் தாங்கிநிற்க வேண்டும். ஆனால் நீரில் அத்தகைய பிரச்சினைகள் இருக்காது. பொதுவாகவே நீரில் நம் உடலின் எடை பாதிக்குப் பாதி குறைந்துவிடும் மேலும் நீரே நம் கனத்தின் பாதிய அளவை தாங்கிக் கொள்வதால் முழு உடல் எடையையும் கால்களிலும் அல்லது முதுகுத்தண்டிலோ கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் நீரில் செய்யப்படும் உடற்பயிற்சிகளுக்கு அதிக எனர்ஜி கொடுக்க தேவையில்லை. அதிக எனர்ஜி செலவிடாத காரணத்தினாலேயே நம் உடலும் மனமும் தரையில் செய்யும் உடற்பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை காட்டிலும் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டால் கூட எனர்ஜி இழப்பாகவோ, அல்லது சோர்வாகவோ உணராது. இதனாலையே இன்னும் அதிகமாக உடற்பயிற்சி செய்வோம்.

மாதவிடாய் காலங்களில் நீச்சல் மற்றும் நீருக்கடியில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் சாத்தியமா?

‘ ஒரு ரகசியம் சொல்கிறேன் பொதுவாகவே நீருக்குள் மாதவிடாய் காலங் களில் நமக்கு ரத்தப்போக்கு ஏற்படுவது கிடையாது. நன்றாக யோசித்துப் பாருங்கள் குளித்து முடிக்கும் வரையிலும் உங்களுக்கு மாதவிடாய் இரத்தப்போக்கு தென்படுகிறதா இல்லை தானே. அப்படித்தான் நீச்சல் மற்றும் நீருக்குள் செய்யும் உடற்பயிற்சியின்போது மாதவிடாய் இரத்தப்போக்கு என்பது நிகழாது. ஒருவேளை சந்தேகம் இருப்பின் அல்லது உடற்பயிற்சிக்கான உடைமாற்றம் மற்றும் காத்திருப்பு என இதற்கிடையில் நிகழ்ந்தால் என்ன செய்வது என்றால் இன்று மருத்துவ உலகம் நவீன மயமாக எவ்வளவோ மாறிவிட்டது. மாதவிடாய் கப், டேம்பான் உள்ளிட்ட எத்தனையோ வழிகள் உள்ளன. மேலும் சானிட்டரி பேட்களே பாதியில் வந்தவைதான் அதுவரையில் நாம் துணிதானே பயன் படுத்திக்கொண்டிருந்தோம். ஒருவேளை சானிட்டரி பேட்கள் தவிர மற்றவை எனக்கு பயன்படுத்திப் பழக்கமில்லை எனில் நீருக்குள் உடற்பயிற்சி செய்வதற்கு மட்டும் ஒரு மாதவிடாய் கப் வாங்கி வைத்துக்கொள்ளலாம். மேலும் ஒரு முறை கப் வாங்கினால் நீங்கள் பல வருடங்களுக்கு பயன்படுத்தலாம். வெறுமனே நீச்சல்,நீரில் செய்யப்படும் உடற்பயிற்சிகளுக்கு மட்டும் கப் பயன்படுத்தலாம். அல்லது டேம்பான் பயன்படுத்தலாம்.

நீச்சல் கற்றுக்கொள்ளும் வழிகள் குறித்து சொல்லுங்கள்

‘ உங்கள் நகரத்தின் அருகில் இருக்கும் நீச்சல் பயிலரங்கத்தில் வெறும் 12 நாட்கள் அடிப்படை பயிற்சிகள் எடுத்துக்கொண்டு தொடர்ந்து பழகினாலே நீச்சல் யாருக்கும் சாத்தியப்படும். மேலும் ரூ.2000 முதல் வகுப்புகள் பெரு நகரங்களிலும், சிறு நகரங்களில் இடம், தரம் பொருத்து இன்னும் குறைவாகவும் நீச்சல் பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன. மேலும் நீரில் நீச்சல் மட்டுமின்றி ஜும்பா, ஏரோபிக் பயிற்சிகள் என பலநீர் சார்ந்த பயிற்சிகள் இன்று பிரபலமாகி வருகின்றன. அனைத்திற்கும் பயிற்சிகள் உள்ளன. மேலும் நீருடன் இணைந்த பயிற்சிகள் மனதுக்கும் கூட அமைதியையும், மகிழ்வையும் கொடுக்க வல்லவை. மேலும் நீரில் சில மணிநேரங்கள் இருப் பதால் உடல் குளுமைஅடைந்து, வெப்பம் சார்ந்த பிரச்னைகளும் கூட தீரும். நீச்சல் குளங்களின் குளோரின்களுக்கு சில தயங்குவர் அதற்கென இருக்கும் தலைக்கவசம், கண்களுக்கு காகுள்கள் என பயன்படுத்தலாம். இதெல்லாமே ஒரு முறை வாங்கினாலே குறிஅந்த பட்சம் இரண்டு வருடங்கள் பயன்படுத்தலாம். மேலும் கால்களில் காயம், அல்லது மூட்டுவலி உள்ளோர், நடக்க முடியாத நிலையில் இருக்கும் நபர்கள், மாற்றுத் திறனாளிகள், அறுவை சிகிச்சை செய்து கொண்டோர்களுக்குக் கூட நீச்சல் பயிற்சிகள் பல பலன்களைக் கொடுக்கும். மேலும் சுலபமாகவும் இருக்கும். குறிப்பாக நீச்சலில் மூச்சுப் பயிற்சிகளும் சேர்ந்து எடுத்துக்கொள்வதால் நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளும் கூட பயன் பெறும். ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நீச்சல் உடைகளும் கூட அவரவர் உடைகள் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப, பட்ஜெட்டிற்கு ஏற்பவும் ரூ. 300 முதல் கூட கிடைக்கின்றன. எனவே இன்று நீச்சல் அவ்வளவு கடினமான விளையாட்டு அல்ல.
– ஷாலினி நியூட்டன்

Related posts

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை: ஒன்றிய, மாநில அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.56,800க்கு விற்பனை: வெள்ளியும் போட்டி போட்டு உயருகிறது; பண்டிகை காலம் நெருங்குவதால் இன்னமும் அதிகரிக்க வாய்ப்பு

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நிபந்தனைகள் திரும்ப பெறப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகம் தகவல்