சூரியகுமார் – ஹர்திக் பொறுப்பான ஆட்டம் இந்தியா 181 ரன் குவிப்பு

பிரிட்ஜ்டவுன்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர்-8 சுற்றில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சூரியகுமார் யாதவ் ஹர்திக் பாண்டியா ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ரோகித், கோஹ்லி இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர்.

ரோகித் 8 ரன் மட்டுமே எடுத்து ஃபரூக்கி பந்துவீச்சில் ரஷித் வசம் பிடிபட்டார். கோஹ்லி ரிஷப் பன்ட் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தது. பன்ட் 20 ரன், கோஹ்லி 24 ரன், ஷிவம் துபே 10 ரன் எடுத்து ரஷித் கான் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 10.5 ஓவரில் 90 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், சூரியகுமார் யாதவ் ஹர்திக் பாண்டியா இணைந்து பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தனர்.

சூரியகுமார் 53 ரன் (28 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஃபரூக்கி வேகத்தில் நபி வசம் பிடிபட்டார். ஹர்திக் 32 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஜடேஜா 7, அக்சர் 12 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்தியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. அர்ஷ்தீப் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கான் பந்துவீச்சில் ஃபரூக்கி, ரஷித் தலா 3, நவீன் உல் ஹக் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கான் களமிறங்கியது.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை