வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு தமிழ்நாடு அரசு எந்த உதவி கேட்டாலும் செய்ய தயார்: ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேட்டி

சென்னை: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தமிழ்நாடு அரசு எந்த உதவி கேட்டாலும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், வெள்ளப் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக நேற்று சென்னை வந்தார். முதலில் அவர் செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். பின்னர், அந்த மாவட்ட கலெக்டர்களிடம் பாதிப்புகள், மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சென்னை தி.நகர், திருவல்லிக்கேணியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர், பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவர் அளித்த பேட்டி: வெள்ளப் பாதிப்புகள், மக்களின் சூழ்நிலை, மறுகட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளை ஆய்வு செய்து, அதன்படி அறிக்கையை அளிக்க உள்ளேன்.தமிழ்நாடு அரசிடம் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைக்க விரும்புகிறேன். புயல் மழை முடிந்து 4 நாட்கள் ஆகியும், வெள்ள நீர் ஏன் வடியாமல் நிற்கிறது என்று விசாரிக்க வேண்டும். இவ்வாறு தண்ணீர் நிற்பதால், மக்களின் உடலுக்கும், கட்டிடத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு ஒன்றிய அரசிடம் தமிழக அரசு எந்த உதவியை கேட்டாலும் செய்ய தயாராக இருக்கிறது. பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையானதை செய்வார். அதற்கான பணிகள் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related posts

பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்

கியூட் தேர்வு முடிவு தாமதம்: என்டிஏ மீது காங். சாடல்

கேரளாவில் நகரசபை அலுவலகத்தில் ஊழியர்களின் ரீல்ஸ் வீடியோ: விளக்கம் கேட்டு நோட்டீஸ்