கணக்கெடுப்பு குளறுபடிகள்

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமிக்கும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே வார்த்தைபோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சார திருடன் என்று குமாரசாமிக்கு பட்டம்சூட்டப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அவருக்கு சொந்தமான சினிமா தியேட்டரில் ஆபாசபடங்களை திரையிட்டு பணம் சம்பாதித்தவர். இப்படிப்பட்டவர்களுக்கு தான் காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பை வழங்குகிறது என்று குற்றம்சாட்டினார். இவர்களது பரஸ்பர குற்றச்சாட்டை ஒரே சமூகத்தினருக்குள் நடக்கும் கவுரவ பிரச்னை இது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 2013 முதல் 2018 வரை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது 2015ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு ரூ.300 கோடி செலவில் நடத்தப்பட்டது. இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் அது கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. பின்னர் பாஜ ஆட்சி அமைந்தது. அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்து அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

தற்போது மீண்டும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ள நிலையில் கிடப்பில் போடப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட அவர் முயற்சி மேற்கொண்டார். அதன்படி அறிக்கையை பிற்படுத்தப்பட்ட ஆணையத்திடம் கேட்டு பெற்றார். ஆனால், சாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்த ஆவணங்கள் பல மாயமாகிவிட்டதால் வெறும் நகல்களை வெளியிட முடியாத சிக்கல் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாமா என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்பட சில அமைச்சர்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பில் குளறுபடிகள் இருப்பதால் அதை வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து ஒக்கலிக சமூகத்தினர் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் சுதாகர், கிருஷ்ணபைரேகவுடா, குமாரசாமி, தேவகவுடா, ஆர்.அசோக், ஷோபா கராந்தலஜே உள்ளிட்ட பலர் கையெழுத்து போட்டுள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது, அறிக்கை வெளியிடுவது ஆகியன அரசியல் என்றும், அதில் குளறுபடிகள் இருப்பதாக குற்றம்சாட்டி ஒக்கலிக சமூகத்தினர் தடை விதிக்க கோரியது சமூக நலன் சார்ந்தது என்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பகிரங்கமாக பதிலளித்துள்ளார். அதுமட்டுமல்ல அரசியல் வேறு, சமூகத்தின் சுயமரியாதையை காப்பது என்பது வேறு.

எனது சமூகத்தின் நலன் கருதி அந்த கடிதத்தில் கையெழுத்திட்டேன். ஒக்கலிக சமூக நலன் காக்க கையெழுத்திட்டதில் என்ன தவறு. பஞ்சமசாலிகள், லிங்காயத்து, வீரசைவர்கள், எஸ்சி., எஸ்டியினர் தங்கள் சமூக நலனை பாதுகாக்க நினைக்கும் போது நான் செய்ததில் என்ன தவறு என்று கூறியுள்ளார். ஒரு பக்கம் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட முதல்வர் சித்தராமையா முயற்சி மேற்கொள்கிறார். அதை துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மறைமுகமாக எதிர்க்கிறார் என்பதால் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு எத்தனை முறை நடத்தினாலும் கண்துடைப்பு தான். அந்த அறிக்கையை வெளியிடாமல் வீணாக கிடப்பில் தான் போட்டுவைப்பார்கள் என்று சமூக நலன் விரும்பிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது