தென்மாவட்டத்தில் தலைகாட்டிய சேலத்துக்காரர் தப்பித்தோம், பிழைத்தோம் என காரில் பறந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தியான தலைவருக்கு பணிகள் செய்ய பல குழுக்கள் அமைக்கப்பட்டும் பெண்கள் யாரும் இடம்பெறக் கூடாதுன்னு உத்தரவாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்திற்கு தியானத்திற்காக உச்சபட்ச தலைவரு வந்திருக்காரு.. அவர் சார்ந்த பணிகளை மேற்கொள்ள பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனவாம்.. சமையல், துப்புரவு, பாதுகாப்பு, மருத்துவம்னு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டிருக்காங்களாம்..

ஆனால் இந்த பணிகளுக்கு பெண்கள் யாரையும் தேர்வு செய்ய வேண்டாம்னு உத்தரவிடப்பட்டு இருந்ததாம்.. எல்லா பணிகளுக்கும் ஆண் அலுவலர்கள், அதிகாரிகள் மட்டுமே இருக்க வேண்டும் என அவரது அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.. இதனால் அதற்கேற்ப பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேர்தல் பிரசாரத்திற்கு அப்புறம் தென் மாவட்டத்தில் தலைகாட்டிய சேலம்காரர் தப்பித்தோம், பிழைத்தோம் என காரில் ஏறி பறந்துவிட்டாராமே..’’ எதுக்காம் எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மக்களவை தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு சேலம்காரர் தென் மாவட்டத்தில் லேசாக தலையை காட்டியிருக்கிறாரு.. அதாவது மாஜி எம்பியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக அல்வா மாவட்டத்திற்கு வந்திருந்தாரு.. ஏற்கனவே மம்மியை ‘இந்துத்துவா தலைவர்’னு மலையான தலைவர் கூறியதற்காக இலைக்கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவிச்சிட்டு வர்றாங்க.. இந்நிலையில், சேலம்காரர் என்ன சொல்லப் போகிறாரோ என்பதற்காக விழாவில் நிருபர்களும் காத்துக்கிட்டு இருந்தாங்களாம்..

ஒரு வழியாக மண்டபத்திற்குள் நுழைந்த சேலம்காரர் விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசுவதை கூட தவிர்த்து விட்டாராம்.. அதுமட்டுமல்லாம நிருபர்கள் காத்திருந்த வழியை விட்டு விட்டு, மற்றொரு வழியாக தப்பித்தோம், பிழைத்தோம்னு கார்ல ஏறி பறந்து விட்டாராம்.. வழக்கமாக நிருபர்களை கண்டால் சரளமாக பேசிவிட்டு செல்லும் சேலம்காரர், தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் காரில் ஏறி சிட்டாய் பறந்து விட்டது காத்திருந்த நிருபர்களுக்கு மட்டுமல்லாது, இலை கட்சியினருக்கும் ஏமாற்றம்தானாம்..

தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதை தெரிந்துள்ளதால் சேலம்காரர் அப்செட்டாக இருக்கிறாரு.. அதனால்தான் மணவிழாவிலும் பேசவில்லை… பேட்டியும் கொடுக்கவில்லை என்கின்றனர் இலை கட்சியினர்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அக்னி வெயில் முடிந்த பிறகும் அக்னி நட்சத்திர சினிமா நாயகர்களை போல மோதல் போக்கில் இருக்கிறாங்களாமே குக்கர், பலாப்பழ ஆதரவாளர்கள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ஹனிபீ மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்த பலாப்பழக்காரர், நடந்து முடிந்த தேர்தலில் குக்கர் தலைவர் ஹனிபீ தொகுதியில் போட்டியிட்டதால் வேறு வழியின்றி கடலோர மாவட்ட தொகுதிக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. இதனால் மனக்குமுறலில் இருந்த பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள், ஹனிபீ தொகுதியில் குக்கர் கட்சித் தலைவருக்கு தேர்தல் வேலை பார்க்காமல் கடலோர மாவட்ட தொகுதிக்கு சென்று விட்டனராம்..

வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ள நிலையில், தொகுதியில் குக்கர் ஆதரவாளர்கள், பலாப்பழ ஆதரவாளர்கள் இடையே இருந்த மனக்குமுறல் தற்போது பந்தயம் கட்டும் அளவிற்கு மாறியுள்ளதாம்.. இதில் ஹனிபீ தொகுதியில் பலாப்பழக்காரர் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பார்.. குக்கர்காரர் வாய்ப்பை வீணடித்து விட்டார்னு பேசி வர்றாங்களாம்… இதனால் ஹனிபீ தொகுதியில் இருதரப்பு ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் அக்னி நட்சத்திர சினிமா நாயகர்களைப் போல மோதல் போக்கில் இருக்காங்களாம்..

தேர்தலின்போது, தீவிரமா இறங்கி வேலை பார்த்தவர்களுக்கு வைட்டமின் ‘ப’ தருவதாக சொல்லி கடைசி வரை தராமல் குக்கர் தலைவர் ஏமாற்றி விட்டாராம்.. இதனால் ஜூன் 4ம் தேதி நடக்க உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு முகவராக செல்வதற்கு அவரது ஆதரவாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனராம்.. இதை பார்த்து குக்கர்காரர் அதிருப்தி அடைந்துள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வசூல் வித்தையை தெரிஞ்சிக்கிட்டு புரமோஷன் வேண்டாம்னு உதறித் தள்ளிய டாலர் சிட்டி காக்கி அதிகாரியை பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘டாலர்சிட்டி என்று அழைக்கப்படுகிற திருப்பூர் மாநகரில் குறுநில மன்னராக போலீஸ் அதிகாரி ஒருவர் வலம் வருகிறாராம்.. நுண்ணறிவு பிரிவில் சிவன் பெயரை கொண்ட இவர், மாநகரில் வசூல் தட்டி எடுப்பதில் டாப்பில் இருக்கிறாரு.. பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு, குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்து, அதன்மூலம் மாதந்தோறும் கரன்சிகளை குவிக்கிறாராம்… திருப்பூர் மாநகரில் மாதம்தோறும் அதிக லட்சங்களுடன் வலம் வரும் ஒரே போலீஸ் அதிகாரி இவர்தானாம்..

இவர், ஏற்கனவே திருப்பூர் மாநகரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியதால் திருப்பூர் நகர் குறித்தும், வசூல் வித்தைகள் குறித்தும் நன்றாகவே தெரிந்தவராம்.. அதனால், தற்போது தடையின்றி கரன்சிகளை குவிச்சிக்கிட்டு இருக்கிறாராம்… இவற்றை, டாலராகவும் மாற்றி வைத்துக்கொள்கிறாராம்… இவருக்கு, சமீபத்தில் பதவிஉயர்வு வந்திருக்கு.. ஆனால், அதை வேண்டாம்னு நிராகரித்து விட்டாராம்..

காரணம், வசூல் பாதிக்கும் என்பதுதானாம்.. தனக்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யாமல் இருக்க, அவர்களிடமும் கரன்சி வாங்கிக்கிறாராம்.. சம்திங் கொடுக்காதவர்களை, ஏதாவது ஒரு வகையில் சிக்க வைத்து விடுகிறாராம்.. இவரது செயல்பாடு, அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் இருக்காம்.. ‘எங்கே போய் முடியுமோ… இந்த வசூல் வேட்டை…’ என்கிறார்கள், சில நியாயமான காவல்துறை அதிகாரிங்க.. என்றார் விக்கியானந்தா.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்