உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று நடந்தது. இதில் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது தலைமையிடத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு தரப்பில் ஆர்.தயாளகுமார் தலைமைப் பொறியாளர்( திருச்சி மண்டலம்), காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டனர்.

அப்போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள், “நடப்பாண்டு தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய நீரை உச்ச நீதிமன்ற ஆணையின்படி பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து அம்மாநில அரசுக்கு ஒழுங்காற்று குழு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தினர். இதேபோன்று புதுவை மற்றும் கேரளா அரசுகள் சார்பில் கலந்து கொண்ட உறுப்பினர்களும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இதையடுத்து ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா கூறியதாவது, “தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு வழங்கப்பட வேண்டிய நீரை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு இனிவரும் நாட்களில் திறந்து விட வேண்டும்” என்று உத்தரவிட்டு, கூட்டத்தை ஒத்தி வைத்தார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு