காவலில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி எதிரொலி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல்: அமர்வு நீதிமன்றம் அனுமதி; 12ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை ஆகஸ்ட் 12 வரை காவலில் வைத்து விசாரிக்க அவரை அமலாக்கத் துறையிடம் ஒப்படைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து அவரை அழைத்து வந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி கைது சரியானது எனவும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தும் தீர்ப்பளித்திருந்தது.

இதை எதிர்த்து மேகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி உச்ச நீதிமன்றம் ஐந்து நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து நேற்று காலை தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க கோரி அமலாக்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவின் இணையதள நகலை அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ஆஜரானார்.இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் உடல் நலனைஅதை அமலாக்கத் துறை கவனித்துக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளது என்றார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. எந்த உத்தரவையும் சேர்க்கவும் முடியாது. அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜி உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும்.

அவரை எப்படி அழைத்து செல்கிறீர்களோ அதே மாதிரி நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி மதியம் 3 மணிக்கு ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை நேற்று இரவு 7 மணிக்கு மேல்தான் புழல் சிறைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். மாலை 6 மணிக்கு மேல் விசாரணைக்காக புழல் சிறை அதிகாரிகள் யாரையும் அனுப்புவதில்லை. நேற்று இரவு 8.30 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் செந்தில்பாலாஜியை அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்