உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான் வழக்கை முடிக்க கூடுதலாக ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என சென்னை மத்திய குற்றப்புலனாய்வு போலீசார் தாக்கல் செய்த வழக்கை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பணம் பெற்றுக்கொண்டு போக்குவரத்துத் துறையில் வேலை வழங்கியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை முடித்து இரண்டு மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த மே 16ம் தேதி சென்னை மத்திய குற்றப்புலனாய்வு போலிசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேற்கண்ட வழக்கில் கூடுதலாக ஆறு மாதம் அவகாசம் கேட்டு சென்னை மத்திய குற்றப்புலனாய்வு போலீசார் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அசனுதீன் அமனுல்லா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை மத்திய குற்றப்புலனாய்வு போலீசார் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கறிஞர்கள் குப்தா, ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோர்,‘‘இந்த விவகாரத்தில் மொத்தம் ஐந்து பிரிவை சேர்ந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். இதில் முதல் பிரிவினர் இடையே விசாரித்து முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

இரண்டாவது பிரிவின் குற்றப்பத்திரிக்கை தயார் நிலையில் உள்ளது. மீதமுள்ள மூன்று பிரிவு ஊழியர்களை விசாரிக்க தான் அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து வழக்கை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்த நீதிபதி விக்ரம்நாத், இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்