ராகுல் தகுதி நீக்கத்துக்கு தடை கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: குஜராத் அரசு, எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் ஈஸ்வர்பாய் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல்காந்தி தனது வயநாடு எம்பி பதவியை இழந்தார். இந்த சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றமும் மறுத்ததால், உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி முறையிட்டார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் ராகுல் காந்தி கடந்த 111 நாட்களாக அவரது பணியை செய்ய முடியவில்லை. எனவே இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றார். அதற்கு நீதிபதிகள், ‘எடுத்த உடனேயே இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. எதிர்தரப்பு வாதங்களை கேட்க வேண்டியுள்ளது. இவ்வழக்கு அரசியல் தொடர்புடையது. எனவே எதிர்மனுதாரர்களான பூர்னேஷ் ஈஸ்வர்பாய் மோடி மற்றும் குஜராத் மாநில அரசு 10 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ எனக்கூறி வழக்கை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related posts

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் கமல்ஹாசன்: ம.நீ.ம. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றம்!