குஜராத் கலவர வழக்கில் டீஸ்டா செடால்வட்டுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு ரத்து

புதுடெல்லி: குஜராத் கலவர வழக்கில் பொய் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை உருவாக்கியது தொடர்பான குற்றச்சாட்டில் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட்டுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஏற்பட்ட கோத்ரா கலவரத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக பொய் சாட்சி மற்றும் ஆதாரங்களை உருவாக்கியதாக சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இதில் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து அவர் விடுதலையானார்.

இந்த வழக்கில் வழக்கமான ஜாமீன் கோரி செடால்வட் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் ரத்து செய்து உடனடியாக சரணடைய உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் கவாய், போபண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, டீஸ்டா செடால்வட்டுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது