மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ உச்ச நீதிமன்றத்தில் சைகை மொழிபெயர்ப்பாளர் நியமனம்

புதுடெல்லி: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் சைகை மொழிபெயர்ப்பாளரை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் மனுதாரர்கள் தரப்பில் காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத பெண் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் சாரா சன்னி என்பவர் தனது வாதங்களை சைகை மொழியில் நீதிபதிகள் முன்னிலையில் முன்பு நடந்த விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.

அப்போது அவரது வாதத்தை நீதிபதிகள் புரிந்து கொள்வதற்காக சைகை மொழி மொழிபெயர்ப்பாளர் சவுரவ் ராய் சவுத்ரி மூலம் தற்காலிக விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். இந்த நிலையில் காது கேளாத மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்கள், நீதித்துறை நடவடிக்கைகளை புரிந்துகொள்ள உதவும் வகையில் சைகை மொழி, மொழி பெயர்ப்பாளரை உச்ச நீதிமன்றம் நியமனம் செய்துள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார்.

அதில், ‘‘உச்ச நீதிமன்றத்தில் காது கேளாதவர் மற்றும் வாய் பேச முடியாதவர்களின் மொழியை புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழி பெயர்ப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பு அமர்வு விசாரணையின் போது சைகை மொழி மொழிபெயர்ப்பாளர் கண்டிப்பாக தேவை என தெரிவித்தார். தலைமை நீதிபதியின் அறிவிப்பை கேட்ட வழக்கறிஞர்கள் இது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என பாராட்டினர்.

Related posts

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்