ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ‘விவிபேட்’ தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடெல்லி: ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ‘விவிபேட்’ தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டுகளையும் முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கும் ஆணையம் ஒப்புக்கொள்ளவில்லை. வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய உத்தரவிடக் கோரி ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மேலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில், ‘சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தலைக் கட்டுப்படுத்தவோ அல்லது தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கவோ முடியாது. மற்றொரு அரசியல் சாசன அமைப்பைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை (விவிபேட்) முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யப்படுகிறது. மின்னனு வாக்கு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது. மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும்
என்ற கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்னரும் குறைந்தது 45 நாள்களுக்கு இயந்திரங்கள் சீல் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். தேர்தல் முடிவுக்கு பின் வாக்கு இயந்திரத்தை சரிபார்க்க வேட்பாளர்கள் கட்டண செலுத்த வேண்டும். இயந்திரத்தில் தவறு இருப்பதை கண்டறிந்தால் கட்டணம் திருப்பி அளிக்கப்படும். இயந்திரத்தில் சின்னத்தை பதிவேற்றி முடிந்ததும் சின்னம் ஏற்றும் அலகு சீல் செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் அறையிலியே சின்னங்கள் பொருத்தும் இயந்திரங்களை வைக்க வேண்டும். முன்னதாக உள்ள நடைமுறைப்படி 5% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘விவிபேட் விவகாரத்தில், சீராய்வு மனுவை முழுமையாக ஆராய்ந்தோம். எங்களது கருத்துப்படி, 26.04.2024 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறோம். சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.

 

Related posts

புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி

வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி