ஜெய்ப்பூர் மின் விநியோக கழகத்திடம் ரூ.1300 கோடி கூடுதல் கட்டணம் கோரிய அதானி நிறுவனத்தின் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ராஜஸ்தான் அரசு மின் நிறுவனத்திடம் கூடுதல் தாமத கட்டணம் ரூ.1300 கோடி செலுத்த கோரி அதானி மின் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெய்ப்பூர் மின் விநியோக கழகம் ராஜஸ்தான் மாநில அரசிற்கு சொந்தமான நிறுவனம். ஜெய்ப்பூர் மின் விநியோக கழகத்திடம் மின் விநியோக ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்துக்காக ரூ.1300 கோடி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அதானி மின் நிறுவனம் கோரியது.

இதை எதிர்த்து ராஜஸ்தான் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஜெய்ப்பூர் மின் விநியோக கழகம் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தாமத மின் கட்டணம் வசூலிக்க அதானி நிறுவனத்துக்கு உரிமையில்லை என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அதானி நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த 2020ல் விசாரித்த 3 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், ராஜஸ்தான் மாநில ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு சரியே என்று தீர்ப்பளித்தது.

3 நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி அதானி மின் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ்,சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் அதானி நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

மேலும் தீர்ப்பை வாசித்த நீதிபதி போஸ்,‘‘ தாமத கட்டணமாக செலுத்த கோரி தாக்கல் செய்யும் மனுக்களை சட்டபூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும். இதை இதர விண்ணப்பமாக தாக்கல் செய்ததற்காக அதானி நிறுவனத்திற்கு ரூ.50,000 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தொகை உச்சநீதிமன்ற சட்ட உதவி குழுவிடம் டெபாசிட் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது