ஆதரவாளர்கள் யாராவது இருக்கிறார்களா என சல்லடை போட்டு தேடும் சின்ன மம்மியின் டிராவலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பதிவுத்துறையில் சம்திங் வாங்கும் பெண் அதிகாரிங்க சிக்கிக்கிட்டே இருக்காங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல 2 எழுத்து இன்ஷியல் கொண்ட குப்பம்னு முடியும் ஊர்ல உள்ள பதிவு துறை அலுவலகத்துல 3 எழுத்து பெயர் கொண்ட பெண் அதிகாரி பணிபுரிஞ்சு வந்தாங்க.. இவங்க அந்த அலுவலகத்துக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்து 2 மாசம் தான் ஆச்சாம்.. அதுக்குள்ள பதிவு செய்றதுக்கு, சம்திங் வாங்குன வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திடுச்சு.. இதை பார்த்து அசந்துபோயி, அதிர்ச்சியான உயர் அதிகாரி, உடனே அந்த பெண் அதிகாரியை சஸ்பெண்ட் செஞ்சிட்டாரு.. ஏற்கனவே அதே 3 எழுத்து பெயர்ல, அதே ஊர்ல பணியாற்றிய பெண் அதிகாரி ஒருத்தர் சம்திங் வாங்கி சிக்குனாங்க.. அப்புறம் காத்திருப்பு பட்டியல்ல வெச்சாங்க.. இப்படி வெயிலூர் மட்டுமில்லாம, கிரிவலம், மிஸ்டர்பத்தூர், குயின்பேட்டைனு தொடர்ந்து பதிவுத்துறையில வாங்கி சிக்கிக்கிட்டே இருக்குறதால அந்த டிபார்ட்மெண்டே ஆடிப்போய் இருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஒரு காலத்தில் சின்னமம்மியை பார்க்க போயஸ் கார்டனில் தவம் கிடந்தோம்.. இப்ப யாரு வணக்கம் போட்டாலும் வண்டியை நிறுத்தும் அளவுக்கு அவரது அரசியல் மாறிடுச்சே என இலைக்கட்சியினர் நையாண்டி செய்றாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியின் மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு சின்ன மம்மி தொண்டர்களை சந்திக்கப் போறேன் என கிளம்பினார். துவக்கத்தில் அருவிகள் மாவட்டத்தில் ஆரம்பித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டவர், 2ம் கட்டமாக தற்போது அல்வா மாவட்டத்தில் தொகுதி வாரியாக சென்று வர்றாரு.. ஆனால் அவருக்கு எதிர்பார்த்த ஆதரவு, கூட்டம் இல்லையாம்.. இலை கட்சியினரும் சின்ன மம்மியை பார்க்கவோ, சந்திக்கவோ வரவில்லையாம்.. இதனால் தான் செல்லும் இடங்களில் முகத்தை பார்த்து யார் வணக்கம் சொன்னாலும், அவரைப் பார்த்து சின்ன மம்மி வண்டியை நிறுத்தி விடுகிறாராம்.. அவரது இந்த மாற்றத்தை அல்வா மாவட்டத்தின் இலை கட்சியினர் பட்டிமன்றம் போடாத குறையாக விவாதித்து பேசுறாங்களாம்.. ஒரு காலத்தில் போயஸ் கார்டனில் அவரை பார்க்க நாம் தவம் கிடந்தோம்.. ஆனால் மம்மி மறைவுக்கு பிறகு அரசியல் எப்படி மாறிவிட்டது பார்த்தீர்களா….? என சின்ன மம்மியின் சுற்றுப்பயணத்தை பார்த்து அல்வா மாவட்டத்தின் இலை கட்சியினர் நையாண்டி செய்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குக்கர் கட்சி தலைமை அடிக்கடி நெற்களஞ்சியத்துக்கு வரும் ரகசியம் என்னவாம்…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெல்டாவில் உள்ள வைத்தியானவரின் ஆதரவாளர்களை குறி வைத்து சேலத்துக்காரர் அணியினர் ஒவ்வொரு நபராக இழுத்து வருகிறார்களாம்.. இது தேனிக்காரர் அணியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.. தொடர்ந்து, நெற்களஞ்சியம் மாவட்டத்தில் குக்கர் கட்சிக்கு உள்ள செல்வாக்கையும் குறைக்க சேலத்துக்காரர் முடிவு செய்துள்ளாராம்.. இதற்கான வேலைகளும் திரைமறைவில் நடந்து வருகிறதாம்.. ஆனால், இந்த தகவல் முன்கூட்டியே குக்கர் தலைமைக்கு சென்று விட்டதாம்.. இதனால் குக்கர் கட்சியின் நிர்வாகிகள் நிகழ்ச்சிகளில் தவறாமல் குக்கர் கட்சி தலைமை கலந்து கொள்கிறாராம்… இதற்காக தனி டீம், கட்சி நிர்வாகிகளின் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறதாம்… தொண்டர் வீடு நிகழ்ச்சியாக இருந்தாலும், அங்கு சென்று விசிட் அடிக்க முடிவு செய்துள்ளாராம்… இருந்தாலும், சேலத்துக்காரர் அணியினர் குக்கர் கட்சி நிர்வாகிகளை இழுக்க முடிவு செய்துள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘செயற்குழுவுல சலசலப்பு ஏற்படாததற்கு இலைக்கட்சி தலைவரின் அதிரடிதான் காரணமாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவர் திடீரென செயற்குழுவை கூட்டி, கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்னு மம்மி போல கர்ஜனை செஞ்சாராம்.. மலராத கட்சியுடன் கூட்டணியே இல்லைன்னு கதவை சாத்தியாச்சி.. இதையும் தாண்டி கூட்டணிக்கு யார் இருக்காங்க.. எந்த நம்பிக்கையில மெகா கூட்டணி அமைப்பேன்னு தைரியமா சொல்றாருன்னு கட்சிக்காரர்களிடம் ஒரே கேள்வியா இருக்காம்.. அதே நேரத்துல செயற்குழுவுல தேனிக்காரரை சேர்க்கணுமுன்னு குரல் எழும் என்ற நம்பிக்கையோடு சிலர் இருந்தாங்களாம்.. ஆனால் குரல் வளையை இலைக்கட்சி தலைவர் நசுக்கிட்டதா தொண்டர்களிடையே கிசு கிசுப்பு எழுந்திருக்கு.. இலைக்கட்சி தலைவரை அவரது மாங்கனி வூட்டுல 6 மாஜிக்கள் ரொம்பவே கோபமா போய் சந்திச்சாங்க.. அப்போது தேனிக்காரர் கூட்டத்தை உள்ளே சேர்ப்பதுடன், மலராத கட்சியுடன் கூட்டணியை வச்சிக்கணுமுன்னு சொல்லியிருக்காங்க.. இந்த மேட்டர் பழசா இருந்தாலும் அங்கு தான் யாரும் எதிர்பாராத வகையில இலைக்கட்சி தலைவர் பெரிய ஆப்பை சொருகிட்டாராம்.. ‘யாரையும் கட்சியில சேர்த்துக்கோங்க.. மம்மியை விட தனது மனைவி ஆயிரம் மடங்கு அதிக சக்தி வாய்ந்தவருன்னு சொன்னவரின் கட்சியோட கூட்டணி வச்சிக்குங்க.. பொதுச்செயலாளர் பதவியில இருந்து விலகிக்கிறேன். நீங்க கட்சியை வழிநடத்துங்க..’ன்னு வாழைப்பழத்துல ஊசியை சொருகுவது போல இலைக்கட்சி தலைவர் சொல்லியிருக்காரு.. இதனை சற்றும் எதிர்பார்க்காத 6 மாஜிக்களும் வெலவெலத்து போயிட்டாங்களாம்.. வேறு ஒருவரை பொதுச்செயலாளராக கொண்டு வந்தால் தேர்தலுக்கு செலவு செய்ய துட்டு யார் கொடுப்பாங்க.. இப்பதவிக்கு சின்னமம்மி ஆசைப்பட்டாலும் அவர் தேர்தலுக்கு துட்டை வெளியே எடுக்க மாட்டாரு.. இவ்வாறு பணத்தை வெளியே எடுத்தாலும் தேர்தலில் போட்டியிட முடியாது. ரெண்டு துரோகியை பார்த்த அவர் வேறு யாரை கைக்காட்டுவார்? என்ற கேள்விகள் 6 பேரின் மனதிலும் திரைப்படமா ஓடியிருக்கு.. இதனால சற்றும் தாமதிக்காமல், அப்படி சொல்லலன்னு சொல்லிக்கிட்டு வாய் பேசாமல் இருந்திருக்காங்க.. அப்படின்னா நான் சொல்றதை கேளுங்கன்னு சொல்லியிருக்காரு. அவர்களும் தலையாட்டிக்கிட்டு வெளியே வந்திருக்காங்க. அதன்பிறகு பிரிந்து போனவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கேள்வியை முன் வைப்பதை நிறுத்திட்டாங்களாம்.. இனிமேல் இலைக்கட்சி தலைவர் என்ன சொல்றாரோ அதன்படியே நடப்போமுன்னு உறுதி ஏத்துக்கிட்டதா தொண்டர்கள் சொல்றாங்க.. இதனால்தான் செயற்குழுவில் எந்த சலசலப்பும் ஏற்படலயாம்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்