எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கு கிரிக்கெட் வீரர்கள் பயப்படுவது ஏன்?: வீராங்கனை கேள்வி; மரணம் குறித்து பாஜக எம்பி கவிதை

புதுடெல்லி: எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கு கிரிக்கெட் வீரர்கள் பயப்படுவது ஏன்? என்று மல்யுத்த வீராங்கனை கேள்வி எழுப்பி உள்ளார். அதேநேரம் பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பி, மரணம் குறித்த கவிதையை வெளியிட்டுள்ளார். மல்யுத்த போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இவர்களது போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதுகுறித்து வினேஷ் போகத் கூறுகையில், ‘நாடு முழுவதும் கிரிக்கெட் விளையாட்டிற்கு பலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் ஒரு கிரிக்கெட் வீரர் கூட எங்களுக்கு ஆதரவாக பேசவில்லை. மல்யுத்த வீரர்கள் வெற்றி பெறும் போது, அனைத்து கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது? கிரிக்கெட் வீரர்கள் எங்களுக்கு ஆதரவாக ஏன் குரல் எழுப்பவில்லை. இவர்கள் பயப்படுகிறார்களா அல்லது ஏதேனும் தவறு நடக்கிறதா? என்று சந்தேகிக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில், பாலியல் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங், தனது மவுனத்தை கவிதை மூலம் வெளிப்படுத்தி உள்ளார். அதில், ‘அதை நான் உணரும் நாள்… அல்லது போராடும் திறன் எனக்கில்லை என்பதைப் புரிந்து கொள்ளும் நாள்… அந்த நாளில் என் மரணத்தை காண விரும்புகிறேன். அப்படி ஒரு வாழ்க்கையை வாழ நான் விரும்பவில்லை. போராட்டங்கள் போலியானவை’ என்று தெரிவித்துள்ளார்.

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி