ஈடிக்கு ஆதரவு தெரிவித்த அண்ணாமலைக்கு கண்டனம்; சாதி பெயரை பதிவிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை வழக்கு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சேலம்: ஆத்தூர் விவசாயிகளுக்கு அனுப்பிய சம்மனில் சாதி பெயரை குறிப்பிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை வழக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் (பொ) மாசிலாமணி விடுத்துள்ள அறிக்கை: சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் சிறு விவசாயிகளான கிருஷ்ணன் (70), கண்ணையன் (65) ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அதுவும் அவர்களின் சாதியை குறிப்பிட்டு அனுப்பி உள்ளது என்பது வன்மையாக கண்டிக்க கூடியது.

மூதாதையர்கள் காலம் முதல் இவர்களுக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலங்களை பன்படுத்தி சாகுபடி செய்து வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு முதல் இவர்களின் நிலத்திற்கு அருகே சாகுபடி செய்து வரும் பாஜ நிர்வாகி குணசேகரன் என்பவர் இந்த நிலத்தை அபகரிக்க பல்வேறு வழிகளில் தொந்தரவு செய்து முடியாமல் போன நிலையில் தான் அமலாக்கத்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கும், விவசாயத்திற்கும், இந்த இரு விவசாயிகளுக்கும் என்ன சம்பந்தம்.

பாஜகவை சேர்ந்தவர், விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க அமலாக்கத்துறையை பயன்படுத்தி உள்ளது தெரிகிறது. இந்த விவசாயிகளின் சாதியை குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்காக வன்கொடுமை சட்டப்படி அமலாக்கத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், விவசாயிகள் உரிய பாதுகாப்பை பெற அமலாக்கத்துறையின் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது வன்கொடுமை வழக்கு போட வேண்டும்.
இந்த சூழலில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, அமலாக்கத்துறை சாதி பெயரை இணைத்து அனுப்பியுள்ள நோட்டீசை நியாயப்படுத்தி உள்ளார். அவருடைய செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி