மல்யுத்த வீராங்கனை விவகாரம் தொடர்பாக பாஜக எம்பிக்கு ஆதரவாக பேசிய சூப்பர்வைசர் அடித்துக் கொலை: பீகார் சுங்கச்சாவடியில் அதிர்ச்சி

போஜ்பூர்: மல்யுத்த வீராங்கனை விவகாரம் தொடர்பாக பாஜக எம்பிக்கு ஆதரவாக பேசிய சூப்பர்வைசர் ஒருவர் பீகாரில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் அரா-பாட்னா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குல்ஹாடியா சுங்கச்சாவடியில் மேற்பார்வையாளராக பல்வந்த் சிங் (35) என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியாகும். இந்நிலையில் சுங்கச்சாவடியில் பல்வந்த் சிங் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அவருடன் அரியானாவை சேர்ந்த சிலரும் பணியில் இருந்தனர். அப்போது அவர்களுக்குள் இன்றைய அரசியல் நிலவரம் குறித்து பேசிக் கொண்டிருந்த போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

அரியானாவை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து, பீகாரை சேர்ந்த பல்வந்த் சிங்கை சரமாரியாக தாக்கினர். நிலைமை மோசமானதால் அங்கிருந்த சிலர், இரு தரப்பினரையும் விலக்கிவிட்டனர். காயமடைந்த பல்வந்த் சிங்கை, அவரது சொந்த ஊருக்கு ரயிலில் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அடுத்த ஓரிரு நாளில் இறந்தார். இவ்விவகாரம் தொடர்பாக பீகார் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாலியல் புகாருக்கு ஆளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் விவகாரத்தால், அவர் மீது அரியானா மல்யுத்த வீரர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அடித்துக் கொல்லப்பட்ட பல்வந்த் சிங், பாஜக எம்பி பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு ஆதரவாக பேசியுள்ளார். அதனால் அவரை அரியானாவை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தற்போது குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்’ என்றனர்.

Related posts

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு