கோடை மழையால் மரத்திலேயே வெடித்து சிதறும் இலவம் காய்கள்: வருசநாடு விவசாயிகள் கவலை

வருசநாடு: வருசநாடு அருகே கோடை மழையால் இலவம் மரங்களில் காய்கள் வெடித்து பஞ்சு வெளியேறுவதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றிய பகுதியில் இலவம் பஞ்சு உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை பெய்தது. இது விவசாய பணிகளுக்கு பேருதவியாக அமைந்தது. மேலும், இலவம் மரங்களில் பிஞ்சுகள் உற்பத்தி அதிகரித்தது. தற்போது இலவம் பஞ்சு அறுவடை சீசன் தொடங்கியுள்ளது. ஓரளவு விலை கிடைத்ததால் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் திடீரென கோடை மழை பெய்தது. இதன் விளைவாக தற்போது இலவம் காய்கள் மரத்திலேயே வெடிக்க தொடங்கியுள்ளன. காய்களில் இருந்து பஞ்சு வெளியேறி காற்றில் பறந்துவிடுகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் இலவம் காய்களில் வெடிப்பு ஏற்படுவதற்கு முன்னர் பறிக்க வேண்டும் என்பதற்காக தற்போது காய் பறிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,“கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் இலவம் பிஞ்சுகள் உற்பத்தி அதிகரித்தது. ஆனால் தற்போது பெய்த கோடை மழையால் காய்களில் வெடிப்பு ஏற்பட்டு வீணாகிறது. இதனால் அனைத்து கிராமங்களிலும் ஒரே நேரத்தில் இலவம் பஞ்சு பறிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கூடுதல் செலவு செய்து வெளியூர்களில் இருந்து பணியாளர்களை அழைத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மிகவும் குறைந்த அளவில் மட்டுமே லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்