கோடைகால மனநிலை மாற்றமும், பெண்களுக்கு வரும் வேலைப்பளுவும்… எதிர்கொள்வது எப்படி?

கோடைகாலம் என்றாலே குழந்தைகள், குடும்பங்களுக்கு கொண்டாட்டாம்தான். விடுமுறை, பயணம், சுற்றுலா, விருந்தினர்கள் வருகை என எப்போதும் வீடு கலகலவென இருக்கும். ஆனால் எப்போதையும் விட இரட்டிப்பு வேலையும், அதனால் மனசங்கடங்களும், குறிப்பாக மூட் ஸ்விங்ஸ் எனப்படும் மனநிலையில் மாற்றங்களும் பெண்களுக்கு மட்டும் அதிகரிக்கும். இதில் விருந்தாளிகள் வந்துவிட்டால் பெண்களின் கோடைவிடுமுறை முழுக்க சமையலறையிலேயே முடிந்துவிடும். ஒரு சின்ன பயணம் என்றால் கூட தயார்படுத்தல் துவங்கி, பாதுகாப்புப் பொறுப்புகள் உட்பட பெண்கள் தலையில்தான் விழும். இதில் எப்போதையும் விட மும்மடங்கு சமையல் வேலை, சமையலறை தூய்மை வேலை.எப்படி தங்களைத் தாங்களே ரிலாக்ஸாக வைத்துக்கொள்வது, இதற்கு என்னவெல்லாம் தீர்வு? சொல்கிறார் மருத்துவ உளவியலாளர் டாக்டர் வந்தனா .

‘ எக்காலத்திலும் ஏன் ஒவ்வொரு வருட கோடை விடுமுறையிலும் தேவையான ஒரு தலைப்பு இது. முதலில் இதற்கு பெண்கள்தான் காரணம். தன்னை சுற்றி இருப்பவர்களை பார்த்துக் கொள்வதுதான் தங்களின் தலையாய கடமை என மனதில் உறுதியுடன் இருப்பதாலேயே குடும்பத்தின் மற்றவர்கள் அனைவரும் இதை அதிகம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த அடுத்தவரின் மீதான அக்கறையால் பெண்கள் தங்களின் சுய ஆரோக்கியத்தை முழுமையாக ஒதுக்கி விடுகிறார்கள். இதனாலேயே மனம், உடல் என ஏராளமான பிரச்சனைகளை அதிகம் சந்திக்கிறார்கள். குறிப்பாக தூக்கம், ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி இவற்றிற்கான நேரம் கொடுப்பது கிடையாது. எதைச் செய்தாலும் கச்சிதமாக, பொறுப்பாக செய்ய வேண்டும் என்கிற பெர்ஃபெக்ஷன் பிரச்னைதான் குடும்பத்தார் அனைவரும் எதற்கு வம்பு என அத்தனை வேலையையும் வீட்டுத் தலைவியின் தலையிலேயே கட்டி விடுகிறார்கள். சுமைகளை பகிர்தல் , வேலைகளைப் பிரித்துக்கொடுத்தல் என்கிற நிலையே இங்கே இல்லை. முக்கியமாக வீட்டில் இருக்கும் அம்மா- மகளுக்கு தான் இந்தப் போராட்டம் அதிகம் நடப்பதை கவனிக்கலாம். ‘ காலையிலிருந்து நான் அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறேன், இவள் ஒருவேலையும் செய்ய மாட்டேன் என்கிறாள் ’ இப்படித்தான் சண்டை ஆரம்பிக்கும். ஆனால் இந்தப் பிரச்சனை உருவாவதற்கு முதற்காரணமே நாம்தான் என்பதை பெண்கள் உணர வேண்டும். சுமாராக 15 முதல் 20 வருடங்கள் என் மகள் என் வீட்டில் இருக்கும் பொழுது தான் சுகமாக இருக்கிறாள். போகும் இடம் எப்படியோ என்னும் எண்ணத்திலேயே அவர்களுக்கு செல்லம் கொடுத்து தங்களின் கஷ்டத்தை காட்டாமலேயே வளர்த்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் உடலளவில் பலவீனமாகும் தறுவாயில் உதவிகளை நாடி முதலில் கேட்பது மகள்களிடம்தான், அடுத்து மகன்களிடம்.

ஆனால் சிறுவயது முதலே எந்த வேலையையும் பகிர்ந்து கொள்ளாமலேயே மொபைலுக்கு பழக்கப்பட்டவர்கள் திடீரென அம்மாவுக்கு உதவி செய் என்றால் அவர்களுக்கு எரிச்சல்தான் உண்டாகும். வீட்டில் தேவையில்லாத விவாதங்களும் வாக்குவாதங்களும் தான் அதிகரிக்கும். அம்மாவால் இவ்வளவு தான் முடியும் இதற்கு மேல் செய்ய வேண்டும் எனில் நீங்களும் ஒரு பகுதி வேலையை பிரித்துக் கொள்ள வேண்டும் அம்மாவுக்கு உதவ வேண்டும் என்கிற மனநிலையை சிறுவயதிலிருந்தே கொடுக்கத் துவங்குங்கள். மேலைநாடுகளில் செல்ஃப் ரெஸ்பான்சிபிலிட்டிகளுக்கென ( Self Responsibility – சுய பொறுப்பு) தனி பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. அதாவது சாப்பிடும் முன் உணவுகளை எடுத்து வைப்பது, அவர்கள் சாப்பிட்ட தட்டை அவர்கள்தான் கழுவ வேண்டும், வீட்டில் ஆங்காங்கே இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்வது, தங்களது அறைகளில் கிடக்கும் பொருட்களை அடுக்கி வைப்பது, தங்களது புத்தக அலமாரிகளை சீரமைப்பது இப்படி எத்தனையோ வேலைகளை சிறு வயது முதலில் அவர்களிடம் வாங்குவதுதான் இதற்கு ஒரே தீர்வு. அதை விட்டுவிட்டு பல வருடங்கள் வரை அவர்களை கோடை விடுமுறையைக் கொண்டாட வைத்துவிட்டு திடீரென எனக்கு கிச்சனில் வெங்காயம் வெட்டிக்கொடு என்றால் எப்படிச் செய்வார்கள்?. இதனால் உண்டாகும் வாக்குவாதத்தால் மேலும் மனக்குழப்பம் தான் அதிகரிக்கும்’ என்னும் வந்தனா சூப்பர் வுமனாக இருக்க வேண்டும் என்ற மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்.

‘ பொதுவாகவே ஒவ்வொரு குடும்பத் தலைவியும் தங்களை ஒரு சூப்பர் வுமனாக காட்டிக் கொள்ள வேண்டி மெனக்கெடுவதை எல்லா வீடுகளிலும் காண முடியும். குறிப்பாக இந்தப் பிரச்சனை தந்தையிடம் இருந்துதான் ஆரம்பிக்கும். அதாவது சிறு வயதிலிருந்து தன்னுடைய வேலையையும் அம்மாவின் தலையில் கட்டிக்கொண்டிருக்கும் அப்பாவை பார்த்து அந்தக் குழந்தையும் அதைத்தான் கடைப்பிடிக்கும். அதேபோல் ஒரு கோடைகால விடுமுறை பயணம் எனில் அப்பா ரூம் புக்கிங், போக்குவரத்து என அனைத்தையும் செய்துவிட்டு அம்மாவிற்கு கிளம்பும் தேதி குறித்த தகவல் மட்டும்தான் சொல்வார். அதன்படி வீட்டில் இருக்கும் அத்தனை வேலைகளையும் முடித்து அத்தனைக்கும் தயார் நிலைக்கு ஆளாவது என பெண்களுக்குத்தான் அடுத்த டாஸ்க். ஒரு பயணம் செல்கிறீர்கள் எனில் மொத்தத் திட்டத்தையும் குடும்பமாக உட்கார்ந்து யாருக்கு என்ன வேலை, யார் எதைச் செய்யப் போகிறோம் எதையெல்லாம் எடுத்து வைக்க வேண்டும் எனப் பேசுங்கள்.

அத்தனை வேலையையும் வீட்டில் இருப்பவர் அனைவரும் ஒன்றிணைந்து திட்டமிட்டால் மட்டுமே வீட்டின் பொறுப்புகள் மொத்தமும் ஒருவர் தலையில் விழாது. மேலும் குழந்தைகளையும் இப்படி ஈடுபடுத்தும் பொழுது அதிகம் மொபைல், டேப் என தங்களை ஒதுக்கிக்கொள்ளாமல் குடும்பத்துடன் நெருக்கம் உண்டாக்குவார்கள். சின்னச் சின்ன வேலைகளை குழந்தைகளிடம் பகிர்ந்து கொடுக்கலாம் என்னென்ன எடுத்து வைக்க வேண்டும் எனப் பட்டியல் தயார் செய்யச் சொல்லலாம். கணினியில் வாங்க வேண்டிய பொருட்களை டைப் செய்து கொடுக்கச் சொல்லலாம். அம்மாவுடன் இணைந்து கிளம்புவதற்கு தேவையான பொருட்களை பேக்கிங் செய்வதில் உதவச் சொல்லலாம். இப்படி எத்தனையோ வழிகளில் உதவுவது மட்டுமின்றி குடும்பமாக ஒன்றிணைந்து நேரத்தையும் கழிக்கும் தருணங்களை உண்டாக்கலாம்’ அதேபோல் பெண்களுக்கும் கோடை விடுமுறை இருக்கிறது என்கிறார் வந்தனா.

‘பொதுவாக கோடைகாலத்தில் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு மற்ற மாதங்களை விட வேலைகள் குறையும். இந்த நேரத்தை பயன்படுத்தி தங்களுக்கான உணவு, ஆரோக்கியம், மருத்துவப் பரிசோதனைகள் , போதுமான ஓய்வு இப்படி எடுத்துக்கொண்டு தங்களை மீண்டும் அடுத்த நிதி ஆண்டுக்குத் தயார் செய்து கொள்ளலாம். பெண்களால் மல்டி டாஸ்கிங் செய்ய முடியும், உண்மை தான். அதே சமயம் மல்டி டாஸ்கிங் ஓவர் லோட் ஆகும் பொழுது வயதான பிறகு வரவேண்டிய அத்தனை பிரச்சனைகளும் முன்பே வந்து சேரும். இவ்வளவு நிமிடங்கள்தான் ஓட வேண்டும் என இயந்திரங்களுக்கே எல்லைகள் இருக்கும் பொழுது இது வெறும் எலும்பு, சதையால் உருவான உடல் அதற்கு நிச்சயம் ஓய்வு தேவை. ஒரு உடலால் எவ்வளவு உழைக்க முடியுமோ அவ்வளவு உழைப்பைத்தான் கொடுக்க வேண்டும். என்கையில் கோடை விடுமுறை ஓய்வு என்பது குழந்தைகள், குடும்பத்தாருக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் நிச்சயம் தேவை. இதற்கு குடும்பத் தலைவிகளுடன் ஒன்றிணைந்து குடும்பத்தாரும் ஆதரவு கொடுத்தால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும்.
– ஷாலினி நியூட்டன்

 

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை