கோடையை எதிர்பார்த்திருக்கும் பனை விசிறி தம்பதியினர்

நன்றி குங்குமம் தோழி

மழைக்காலம், பனிக்காலம் முடிந்து கோடை வெயிலின் தாக்கம் துவங்கிவிட்டது. இனி வரும் மூன்று முதல் நான்கு மாதம் வரை வெயில் நம் அனைவரையும் வாட்டி வதைக்கப்போகிறது. இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க மக்கள் ஏ.சியின் பயன்பாட்டிற்கு மாறிவருகின்றனர். ஏ.சி., ஃபேன் வசதி இருந்தாலும், இவை எல்லாம் மின்சாரம் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். நகர மக்களுக்கு மின்சார பயன்பாடு என்பது தொடர்ந்து இருந்தாலும், சில சமயம் அதில் பழுது ஏற்படும் போது, வெயிலின் தாக்கத்தை தணிக்க ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக விசிறி மட்டை இருப்பது அவசியம்.

கிராமப்புற மக்கள் வீடுகளில் விசிறி இல்லாமல் இருக்காது. குளிர்ந்த காற்றினை நம்மேல் வருட செய்யும் இந்த பனை ஓலை விசிறியினை செய்வது ஒரு தனிப்பட்ட கலை. அதனை 83 வயதிலும் அசராமல் செய்து வருகிறார்கள் பழூரைச் சேர்ந்த 80 வயது நிரம்பிய தம்பதியினர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பழூர் கிராமத்தில் வசித்து வருபவர் குஞ்சிதபாதம். 83 வயது முதியவர். இவருடைய மனைவி 77 வயதான வசந்தா. 45 ஆண்டு திருமண வாழ்க்கை. ஆனால், இவர்களுக்கு பெயர் சொல்ல குழந்தைகள் இல்லை. ஆனாலும் இந்த வயதிலும் தங்களின் உழைப்பை மட்டுமே நம்பி இந்த தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் கூலி வேலைக்குச் சென்ற குஞ்சிதபாதம், நாளடைவில் தாமே ஏதாவது கைத்தொழில் கற்றுக்கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தார். அப்போது உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்றபோது பனை ஓலையில் விசிறி தயாரிப்பதைக் கண்டார். அங்கு சில நாட்கள் தங்கிப் பயிற்சி எடுத்துக் கொண்டு, பின்னர் தனது சொந்த ஊருக்கு வந்து தாமே பனை ஓலையில் விசிறி மட்டை தயாரிப்பதைத் தொழிலாக மேற்கொண்டு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொழிலினை தன் மனைவியுடன் இணைந்து செய்து வருகிறார்.

இத்தொழிலில் பெரிதாக வருமானம் இல்லை என்றாலும், யாரிடமும் கையேந்தாமல் ஏதோ அன்றாட சாப்பாட்டிற்காவது இந்தத் தொழில் கைகொடுக்க உதவுகிறது என்கிறார் குஞ்சிதபாதம். அவருக்கு உறுதுணையாக மனைவி வசந்தா, வீட்டு வேலைகளைச் செய்வதோடு மட்டுமின்றி விசிறி செய்வதற்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்து, கணவன் உழைப்பில் தாமும் பங்கெடுத்துக்கொள்கிறார்.விசிறி தயாரிப்பதற்காக முதியவரான குஞ்சிதபாதம் தனது வீட்டிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் ஓட்டிச் சென்று, பனை மட்டைகளை சேகரித்து வருகிறார். அதன்பிறகு அவற்றைக் காய வைத்து, ஒவ்வொரு மட்டையாக வெட்டி, பிறகு விசிறியாக தயாரிக்கிறார்.

தயார் செய்யப்பட்ட விசிறிகளை எடுத்துக்கொண்டு கும்பகோணம், ஜெயங்கொண்டம் ஆகிய நகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சைக்கிளில் சென்று, மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்றும் இதனை விற்பனை செய்கிறார். ஒரு பனை விசிறி ரூபாய் 25க்கு விற்பனை செய்து வரும் இவர்களை கவனிக்கக் குழந்தைகள் இல்லாததாலும், தோள் கொடுக்க உறவினர்கள் யாரும் முன்வராததாலும், யாருடைய ஆதரவுமின்றித் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

மாதம் 300 ரூபாய் வாடகை கொடுத்து தற்போது கூரை வீட்டில்தான் வசித்து வருகின்றனர். முதியோர் உதவித்தொகை கேட்டு இருவரும் அரசுக்கு கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் முதியோர் உதவித்தொகை குஞ்சிதபாதத்துக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அவரின் மனைவிக்கு வழங்கப்படவில்லை. முதியவருக்கு வழங்கப்படும் அந்தப் பணம் வீட்டு வாடகைக்கும், அன்றாட செலவுக்கும் சரியாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

‘‘நாங்கள் இன்னும் கொஞ்ச காலம்தான் வாழப் போகிறோம். எனவே, என் மனைவிக்கும் தமிழக அரசு உதவித்தொகை வழங்கினால் பேருதவியாக இருக்கும்’’ என்கிறார் முதியவர் குஞ்சிதபாதம்.
முகத்தில் வறுமை தெரிந்தாலும், உள்ளத்தில் கவலை இருந்தாலும், எதையும் காட்டிக்கொள்ளாமல் தள்ளாடும், வயதிலும், தன் உயிர் மூச்சு நிற்கும் வரை உழைப்பையே மூலதனமாகக் கொண்டு, ஒரு இளைஞனை போன்று கம்பீரமாக நடை போடுகிறார் குஞ்சிதபாதம்!

தொகுப்பு : கவிதா பாலாஜிகணேஷ்

Related posts

கிரியேட்டிவிட்டி இருந்தால் ரெசின் ஆர்ட் துறையில் ஜெயிக்கலாம்!

உன்னத உறவுகள்

கொங்கு ஸ்டைல் உணவுப் பிரியர்களின் நறுவி!