கரும்பு தந்த இனிய வாழ்வு!

குமரி விவசாயிகள் ரப்பர் மற்றும் வாழை விவசாயத்திற்கு பழக்கப்பட்டவர்கள். நெல், மரவள்ளி, தென்னை, காய்கறிகள் என சிறிது சிறிதாக அவர்களது விவசாயத்தை நீட்டித்துக் கொண்டும் வருகிறார்கள். வறட்சியான பகுதிகளில் பயிரிடப்படும் ட்ராகன் ஃபுரூட்டைக்கூட குமரி விவசாயிகள் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கரும்பு விவசாயத்திலும் சக்கைப்போடு போட்டு வருகிறார்கள். கருப்பு மற்றும் வெள்ளை கரும்புகள் பயிரிட்டு சர்க்கரை ஆலைகளுக்கும், ஜூஸ் நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்து நல்ல வருமானமும் பார்த்து வருகிறார்கள். அப்படி கரும்பு விவசாயம் செய்து தனது தொழிலையும் விவசாயத்தையும் பெரிதாக்கிக் கொண்டவர்தான் முத்துக்குமார். குமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே உள்ள பொட்டல்குளத்தை சேர்ந்த இவர், கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருவதோடு, தனது வயலில் கரும்பு விவசாயமும் செய்து வருகிறார். தனது தொழிலுக்குத் தேவையான மூலப்பொருளை (கரும்பு) தானே உற்பத்தி செய்யும் முத்துக்குமாரை அவரது கரும்புத் தோட்டத்தில் சந்தித்தோம்.

“நான் அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு சொந்தமாக பொட்டல்குளத்தில் 50 சென்ட் விவசாய நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் பல்வேறு விவசாயப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். கடந்த சில வருடத்திற்கு முன்பு நிலக்கடலை சாகுபடி செய்திருந்தேன். நிலக்கடலையில் நல்ல மகசூல் கிடைத்தது. நான் கன்னியாகுமரியில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறேன். ஜூஸ் கடை நடத்தி வருவதால் கரும்பு எனக்கு அதிகம் தேவைப்பட்டது. இதனால் நமது நிலத்தில் கரும்பு சாகுபடி செய்யலாம் என முடிவு செய்தேன். நிலக்கடலை அறுவடை முடிந்த பிறகு அந்த இடத்தில் கரும்பு சாகுபடி செய்தேன். திருவிழாக் கடைகளில் மொத்தமாக கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை நடக்கும். கரும்பு வாங்கிச் செல்பவர்கள் கொண்டைப் பகுதியை வெட்டித் தள்ளிவிட்டு மற்ற பகுதியை வாங்கிச் செல்வார்கள். அந்த கொண்டைப் பகுதியை சேகரித்து எனது 50 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்தேன். இதன்படி ெமாத்தம் 10 ஆயிரம் கரும்புக் கரணைகள் (விதைப்புல்) நடவு செய்தேன்.

கருப்பு கரும்பு சாகுபடி செய்த 10வது மாதத்தில் அறுவடை நடந்தது. எனது நிலத்தில் தண்ணீர் அதிகமாக இருந்தால், அதனைத் தடுக்க கிராவல் மண்ணைப் போட்டேன். கிராவல் மண் போட்டபிறகு எனது நிலத்தில் கருப்பு கரும்பு சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வெள்ளைக் கரும்பு சாகுபடி செய்ய முடிவு செய்து கடந்த டிசம்பர் மாதம் வெள்ளைக் கரும்பு சாகுபடி செய்தேன். சாகுபடி செய்யும்போது மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்வது போன்றே கரும்பு சாகுபடி செய்தேன். சாகுபடி செய்த ஒரு மாதத்தில் ஒரு டெம்போ சாண உரம், அதனுடன் டிஏபி ஒரு மூடை கலந்து உரமாக கொடுத்தேன். வெள்ளைக் கரும்புக்கு தண்ணீர் பாய்ச்சும்போது கவனமாக இருக்க வேண்டும். ஈரப்பதம் இருக்க வேண்டும். அதற்காக அதிக ஈரமாகவும் இருக்கக்கூடாது. ஈரம் இல்லாமலும் இருக்கக்கூடாது அதனைக் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

சாகுபடி செய்த இரண்டு மாதத்தில் கரும்பு அடர்த்தியாக வளரத் தொடங்கும். நாம் அதன் கீழ்ப்பகுதியில் உள்ள இலைகளை அடர்த்து கரும்புகள் அருகே உள்ள பள்ளத்தில் போட்டு அதன்மேல் மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும். பிறகு தண்ணீர் பாய்ச்சும்போது மண்ணுக்குள் போட்டுள்ள இலை கரும்புக்கு தேவையான உரமாக மாறிவிடும். கரும்புக்கு இரண்டாவதாக அரை மூட்டை யூரியா, அரை மூட்டை டிஏபி உரங்களைக் கலந்து போட்டேன். உரம் போட்டபிறகு மூன்று முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தற்போது நான் சாகுபடி செய்த வெள்ளைக் கரும்பு அறுவடை நடந்து வருகிறது. எனது கரும்பு ஜூஸ் கடைக்கு போக மீதியுள்ள கரும்புகளை விற்பனை செய்து வருகிறேன்.

என்னைப் போன்று கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ள வியாபாரிகள் நேரடியாக வந்து கரும்புகளை வாங்கிச் செல்கிறார்கள். 15 கரும்புகளை ஒரு கட்டாக கட்டி வைத்து விற்பனை செய்கிறேன். எனது தோட்டத்தில் வந்து வாங்கி செல்பவர்களுக்கு 15 கரும்பு ரூ.350க்கு விற்பனை செய்கிறேன். ஆனால் தோட்டத்திற்கு வராமல் கேட்பவர்களுக்கு நான் ரூ.400க்கு விற்பனை செய்து வருகிறேன். கரும்பு சாகுபடி செய்தால் நல்ல வருமானம் கிடைப்பது நிச்சயம். நான் கருப்பு கரும்பு சாகுபடி செய்தபோது உரம், பராமரிப்பு, வேலை ஆட்கள் ஊதியம் என மொத்தம் ரூ.2 லட்சம் வரை செலவு ஆனது. ஆனால் வருமானமாக ரூ.5 லட்சம் கிடைத்தது. ஆனால் தற்போது சாகுபடி செய்து அறுவடை செய்யும் வெள்ளைக் கரும்புக்கு இதுவரை ரூ.1 லட்சம் வரை செலவு செய்திருக்கிறேன். ஆனால் கருப்புக் கரும்புக்கு கிடைத்தது போன்று வெள்ளைக் கரும்புக்கும் ரூ.5 லட்சம் வருமானம் கிடைக்கும்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
முத்துக்குமார் 89032 53070.

நோய் தாக்குதல் குறைவு

வெள்ளைக் கரும்பை நோய் தாக்குவது இல்லை. நான் கருப்புக் கரும்பு சாகுபடி செய்தபோது குருத்துப் பூச்சித் தாக்குதல் இருந்தது. வேளாண்மைத் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்த பூச்சி மருந்தை அடித்தபிறகு குருத்துப் பூச்சி தாக்குதல் குறைந்து விட்டது. கருப்புக் கரும்பை விட வெள்ளைக் கரும்பில் அதிக இனிப்புத்தன்மை இருக்கும். ஆனால் ஜூஸ் குறைவாக இருக்கும். இனிப்பு அதிகமாக இருப்பதால், கரும்பு ஜூஸ் வியாபாரிகள் ஆர்வமாக வந்து வாங்குகிறார்கள். குமரி மாவட்டத்தில் கரும்பு விளைவிக்க முடியாது என விவசாயிகள் நினைத்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் வண்டல் மண், செம்மண் அதிகமாக இருக்கிறது. இந்த மண்ணிற்கு கருப்புக் கரும்பு நன்றாக வரும். நான் சாகுபடி செய்ததை பார்த்து எனது சகோதரர் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இரண்டு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்தார். அவர் அறுவடை செய்யும்போது கரும்பு சீசன் இல்லாத நேரம். இதனால் அவருக்கு கரும்பு மூலம் நல்ல வருவாய் கிடைத்தது. மீண்டும் கரும்பு சாகுபடி செய்ய முடிவு செய்துள்ளார். குறைவான செலவுடன், அதிக வருவாய் கிடைப்பதால், குமரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்ய முன் வர வேண்டும். இதற்காக வேளாண்மை அதிகாரிகள் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார் முத்துக்குமார்.

இது புதுசு

கரும்பு சாகுபடி செய்ய விதைக்கரணைகளை தரமானதாக தேர்ந்தெடுப்பது அவசியம். இதற்காக பல விவசாயிகள் கரும்பின் வேர்ப்பகுதியை அதிகமாக விரும்புவார்கள். ஆனால் முத்துக்குமார் கொண்டைப்பகுதியைத்தான் தேர்வு செய்கிறார். இதற்கு இவர் சூப்பரான காரணம் ஒன்றையும் சொல்கிறார். “கரும்பு சாகுபடி செய்யும்போது விவசாயிகள் கரும்பின் வேர்ப்பகுதியை தேர்வு செய்கிறார்கள். அதனைவிட கரும்பின் கொண்டைப் பகுதியை நாம் தேர்வு செய்து சாகுபடி செய்தால், நல்ல வீரியமாக கரும்பு முளைக்கும். கொண்டைப் பகுதியை சாகுபடி செய்த 7வது நாளில் முளைப்பு வெளியே வரும்’’ என்கிறார்.

 

Related posts

சாலையோரம் நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 402 பச்சோந்திகள் பறிமுதல்: கடத்தல் ஆசாமி கைது

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார்